கருங்குழி ரயில் பாதையில் மேம்பாலம் அமைக்க ரூ.41 கோடி ஒதுக்கீடு! வாகன நெரிசல் குறைவதோடு 20 கிராம மக்களுக்கு பயன்
கருங்குழி ரயில் பாதையில் மேம்பாலம் அமைக்க ரூ.41 கோடி ஒதுக்கீடு! வாகன நெரிசல் குறைவதோடு 20 கிராம மக்களுக்கு பயன்
UPDATED : ஆக 11, 2026 07:16 AM
ADDED : ஆக 10, 2026 09:12 PM

மாமல்லபுரம்: மதுராந்தகம் அருகே திருக்கழுக்குன்றம் சாலையில், 41.50 கோடி ரூபாய் மதிப்பில், ரயில்வே மேம்பாலம் அமையவுள்ளதாக, மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்த ரயில்வே மேம்பாலம் அமைந்தால், ரயில்வே 'கேட்' மூடப்படுவதால் ஏற்படும் நெரிசலில் தவிக்கும் வாகன ஓட்டிகள் பயனடையவதோடு, 20க்கும் மேற்பட்ட கிராமத்தினரும் நிம்மதியடைவர்.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் இருந்து, மதுராந்கம் அடுத்த கருங்குழி, மேலவலம்போட்டை வழியாக திருக்கழுக்குன்றம் வரை, 21 கி.மீ., மாநில நெடுஞ்சாலை உள்ளது.
இத்தடத்தில், தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் இருந்து 2.5 கி.மீ., துாரம் அரையப்பாக்கம் பகுதியில், சென்னை - கன்னியாகுமரி ரயில் வழித்தடம், சாலையின் குறுக்கே கடக்கிறது.
மாமல்லபுரம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் இருந்து, மதுராந்தகம், மேல்மருவத்துார், வேடந்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வோர், இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலை குறுகி, குண்டும் குழியுமாக சீரழிந்ததால், சுற்றுலா உள்ளிட்ட வாகனங்கள், செங்கல்பட்டு வழியாக, 18 கி.மீ., சுற்றிச் சென்றன.
இதனால், மாமல்லபுரம் - மதுராந்தகம் இடையே போக்குவரத்து அவசியம் கருதி, சாலையை மேம்படுத்த பயணியர் வலியுறுத்தினர். இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டதை தொடர்ந்து, 2019ல், 33 அடி அகல சாலையாக விரிவுபடுத்தப்பட்டது.
தற்போது வாகன போக்குவரத்து அதிகரித்து, ஆயிரக்கணக்கான வாகனங்கள் மாமல்லபுரம் - மதுராந்தகம் வழியாக கடக்கின்றன.
இதற்கிடையே, 15 ஆண்டுகளுக்கு முன், விழுப்புரம் - செங்கல்பட்டு இடையே, மற்றொரு ரயில் பாதையும், இப்பகுதியில் அமைக்கப்பட்டது.
இதனால், ரயில் போக்குவரத்தும் அதிகரித்து, விரைவு ரயில்கள், சரக்கு ரயில்கள் என, தினமும் 50க்கும் மேற்பட்டவை, இவ்வழியாக கடந்து செல்கின்றன.
ஒரு ரயில் கடக்கும்போது, 30 நிமிடங்கள் வரை ரயில்வே கேட் மூடப்படுகிறது. அடுத்தடுத்து ரயில்கள் செல்லும்போது கேட் மூடப்படுவதால், வாகனங்கள் அணிவகுத்து, போக்குவரத்து முடங்குகிறது.
மாமல்லபுரத்தில் இருந்து மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்வோர், பிற பகுதிகளில் இருந்து, இங்கு வருவோர், மதுராந்தகம் - திருக்கழுக்குன்றம் இடையேயுள்ள, 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர், ரயில்வே 'கேட்' மூடப்படுவதால், குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். குறிப்பாக மருத்துவ அவசரத்திற்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
அதேபோல், சென்னையை ஒட்டியுள்ள கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை பகுதியினர், பெருங்களத்துார் - செங்கல்பட்டு போக்குவரத்து நெரிசலால் மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் வழியாகவும் பலரும் செல்கின்றனர். ரயில்வே 'கேட்' மூடுப்படும்போதெல்லாம் இவர்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
மாமல்லபுரம் - மதுராந்தகம் சாலை விரிவாக்கத்திற்கு பின், சுற்றுலா பயணியருக்கு பிரதான சாலையாக மாறியுள்ளது. சாலை விரிவாக்கத்தின்போதே இங்குள்ள ரயில்வே 'கேட்' பகுதியில், மேம்பாலம் அமைத்திருக்க வேண்டும்.
அவ்வாறு அமைக்காததால், வாகன ஓட்டிகள் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர். இங்கு பாலம் கட்டப்பட்டிருந்தால், பயண நேரம் 30 நிமிடங்கள் குறைந்திருக்கும்.
ஆனால், ரயில்கள் தாமதமாகி வரும் சூழலில், வழக்கமான நேரத்தைவிட அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இச்சூழலில், ரயில்வே நிர்வாகம் மற்றும் தமிழக அரசு நிதி பகிர்வில், ரயில்வே மேம்பாலம் அமைக்க, தற்போது 41.50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
ராஜ்யசபா அ.தி.மு.க., -- எம்.பி., தனபால், சபையில் எழுப்பிய கேள்விக்கு, இத்திட்டத்திற்கு, 41.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாகவும், விரைவில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
நிலம் கையகப்படுத்துதல் மற்றும் ரயில்வே துறையின் அனுமதியைப் பெற்ற பின், ரயில்வே மேம்பால பணி தொடங்கப்படும். தவிர இதற்கான 'டெண்டர்' இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்த ரயில்வே மேம்பாலம் அமைந்தால், மாமல்லபுரம் - மதுராந்தகம் சாலையில் சுற்றுலா வாகனங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வாகன ஓட்டிகளுக்கு நேர விரையம் ஏற்படாது. இந்த மேம்பால பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வர ஒன்றரை ஆண்டுகள் ஆகும்.
குறிப்பாக கடம்பாடி பகுதியில் தொடங்கி மேலகுப்பம், நல்லான்பிள்ளை பெற்றாள், நல்லுார், பட்டிக்காடு, முள்ளிகொளத்துார், கருமாரப்பாக்கம், ஈச்சங்கரணை, அம்மணம்பாக்கம், குன்னவாக்கம் உள்ளிட்ட பகுதி மக்களும் பயனடைவர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
