/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விதிமு றையை மீறி மெய்யூர் ஏரியிலிருந்து... மணல் கொள்ளை:நீரை வெளியேற்றுவதால் விவசாயிகள் அதிர்ச்சி
/
விதிமு றையை மீறி மெய்யூர் ஏரியிலிருந்து... மணல் கொள்ளை:நீரை வெளியேற்றுவதால் விவசாயிகள் அதிர்ச்சி
விதிமு றையை மீறி மெய்யூர் ஏரியிலிருந்து... மணல் கொள்ளை:நீரை வெளியேற்றுவதால் விவசாயிகள் அதிர்ச்சி
விதிமு றையை மீறி மெய்யூர் ஏரியிலிருந்து... மணல் கொள்ளை:நீரை வெளியேற்றுவதால் விவசாயிகள் அதிர்ச்சி
UPDATED : நவ 02, 2025 07:08 AM
ADDED : நவ 02, 2025 01:18 AM

செங்கல்பட்டு: மெய்யூர் ஏரியில் மண் எடுக்க அனுமதி பெற்ற தனியார் ஒப்பந்ததாரர், விதிமுறையை மீறி மண் எடுப்பதாகவும், ஏரியிலிருந்து தண்ணீரை வெளியேற்றுவதாகவும், கிராம மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மெய்யூர் ஊராட்சி, பாலாற்றங்கரை அருகில் அமைந்துள்ளது. இங்கு மெய்யூர், அண்ணா நகர், அம்பேத்கர் நகர், இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில், 5,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள மெய்யூர் ஏரி, நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரியின் தண்ணீரைப் பயன்படுத்தி, 2,000 ஏக்கருக்கும் மேல், நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
விவசாய தொழிலுடன் கால்நடைகள் வளர்ப்பிற்கு தீவனம் ஆதாரமாகவும், குடிநீர் ஆதாரமாகவும் இந்த ஏரி உள்ளது.
பாலாற்றங்கரைக்கு அருகே உள்ள இந்த மெய்யூர் ஏரியில், நான்கு அடிக்கு கீழ்ப்பகுதியில் இயற்கையாகவே, மணல் உள்ளது.
இந்நிலையில் மெய்யூர் ஏரியிலிருந்து மண் எடுக்க, கடந்த 2023ம் ஆண்டு, தனியார் ஒப்பந்ததாரர்கள் கனிம வளத்துறையினரிடம் அனுமதி கோரி மனு அளித்தனர்.
இம்மனுவை பரிசீலனை செய்து, ஏரியில் மண் எடுக்க, தனியார் ஒப்பந்ததாரருக்கு, கனிம வளத்துறை அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.
அதன் பின், 'பொக்லைன்' இயந்திரம் மூலமாக, லாரிகளில் மண் எடுத்து விற்பனை செய்யத் துவங்கினர். அப்போது, நான்கு அடிக்கு மேல் இருந்த களிமண்ணை எடுத்த பின், பாலாற்று மணல் கிடைத்தது.
இந்த மணல், முறைகேடாக விற்கப்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், பாலாற்றில் இருந்து மணல் எடுக்க, கடந்த 2012ம் ஆண்டிலிருந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை, தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இதனால், வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு, பாலப்பணிகளுக்கு மணல் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆற்று மணல் கிடைக்காததால், எம் - சாண்ட் மண் வாங்கி, பொதுமக்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்த துவங்கினர்.
இந்நிலையில், மெய்யூர் ஏரியில் இருந்து பாலாற்று மணலை எடுக்கும் ஒப்பந்ததாரர், அதை தனியார் நிறுவனங்கள், வீடு கட்டுபவர்கள் ஆகியோரிடம், ஒரு லாரி மணல் 40,000 ரூபாய் வரை விற்பனை செய்தார்.
இந்த விற்பனையை அறிந்த அரசியல் கட்சி பிரமுகர்கள், உள்ளாட்சி அமைப்பைச் சேர்ந்தவர்கள், கனிம வளத்துறை, வருவாய்த்துறை, போலீசார் ஆகியோருக்கு, ஒப்பந்ததாரர் 'மாமூல்' கொடுத்து வந்தார். அதன் பின், ஏரியில் 15 அடி ஆழத்திற்கு மேல் மணல் எடுத்து விற்பனை செய்யப்பட்டது.
இதனால், மெய்யூர் ஏரியில் ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு, அதில் தண்ணீர் தேங்கி உள்ளது. ஏரியில் குளிக்க செல்பவர்கள், ஆழமான பகுதிக்குச் சென்றால், இந்த பள்ளங்களில் சிக்கி உயிரிழக்கும் ஆபத்து உள்ளது.
இதற்கிடையில், மெய்யூர் ஏரியில் மண் எடுக்க, மற்றொரு தனியார் ஒப்பந்ததாரருக்கு, கடந்த செப்., மாதம் கனிமவளத்துறை அனுமதி வழங்கி உள்ளது.
தற்போது, தனியார் ஒப்பந்ததாரர், மெய்யூர் ஏரியில் இருந்து மணல் எடுத்து விற்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இதற்கு, ஏரியில் தற்காலிக பாதை அமைத்தும், ஏரியிலிருந்து பெரிய மோட்டார் மூலமாக நீரை வெளியேற்றியும், பல அடி ஆழத்திற்கு மணல் எடுக்கின்றனர். இதனால், விவசாயம் மற்றும் நிலத்தடி நீர் பாதிக்கும் என, கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே, ஏரியை பாதுகாக்க, நீர்வளத்துறை, கலெக்டர் ஆகியோர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள், கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மெய்யூர் ஏரியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், தனியார் ஒப்பந்ததாரர் மண் எடுத்தார். இதனால், நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக பாதித்தது. மீண்டும் இந்த ஏரியிலிருந்து மண் எடுக்க, தனியார் ஒப்பந்ததாரர் ஒருவருக்கு அனுமதி வழங்கி உள்ளனர். ஏரியில் விதிமுறைகளை மீறி மண் எடுப்பதால், பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு மக்கள், கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. ஏரியில் மண் எடுப்பதை, கலெக்டர் ஆய்வு செய்ய வேண்டும். - கோ. நவீன், மெய்யூர்

