/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அவசர சிகிச்சை பிரிவு புது கட்டடம் திறக்காததால் செய்யூரில் தவிப்பு
/
அவசர சிகிச்சை பிரிவு புது கட்டடம் திறக்காததால் செய்யூரில் தவிப்பு
அவசர சிகிச்சை பிரிவு புது கட்டடம் திறக்காததால் செய்யூரில் தவிப்பு
அவசர சிகிச்சை பிரிவு புது கட்டடம் திறக்காததால் செய்யூரில் தவிப்பு
ADDED : ஜன 11, 2025 01:45 AM

செய்யூர்:செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் பஜார் வீதியில், அரசு பொது மருத்துவமனை உள்ளது.
இம்மருத்துவமனை நல்லுார், புத்துார், ஓணம்பாக்கம், தண்ணீர்பந்தல், சித்தாற்காடு, அம்மனுார், கீழச்சேரி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராம மக்களின் பிரதான அரசு மருத்துவமனையாக உள்ளது.
புறநோயாளிகள், மகப்பேறு மற்றும் அவசர சிகிச்சை என, தினசரி நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
கிழக்கு கடற்கரை சாலைப் பகுதியில் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்படுவதால், அவசர சிகிச்சைக்காக மதுராந்தகம் அல்லது செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு காயமடைவோர் அனுப்பப்படுகின்றனர்.
அவசர சிகிச்சைக்காக நீண்ட துாரம் செல்லும் நிலை உள்ளதால், உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.
இதனால், செய்யூர் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு ஏற்படுத்த வேண்டும் என, இப்பகுதிவாசிகள் நீண்ட நாட்களாக வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
இதையடுத்து, மருத்துவமனை வளாகத்தில் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட புற நோயாளிகள் பிரிவு கட்டடத்தை இடித்து அகற்றி, பொதுப்பணித்துறை சார்பாக 60 லட்சம் ரூபாய் மதிப்பில், 1,500 சதுர அடி பரப்பளவில் புதிய கட்டடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
கடந்த 2023 செப்., 22ம் தேதி இதற்கு பூமி பூஜை நடந்தது.
கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடந்து, கடந்த ஜூன் மாதம் அனைத்து பணிகளும் நிறைவடைந்தன. ஆனால், கடந்த 6 மாதங்களாக இந்த அவசர பிரிவு கட்டடம் செயல்படாமல், திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது.
துறை சார்ந்த அதிகாரிகள் கவனித்து, அவசர சிகிச்சை பிரிவு கட்டடத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

