/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விதை நெல் உற்பத்தி 10,735 டன் இலக்கை தாண்டி வேளாண் துறை அசத்தல்
/
விதை நெல் உற்பத்தி 10,735 டன் இலக்கை தாண்டி வேளாண் துறை அசத்தல்
விதை நெல் உற்பத்தி 10,735 டன் இலக்கை தாண்டி வேளாண் துறை அசத்தல்
விதை நெல் உற்பத்தி 10,735 டன் இலக்கை தாண்டி வேளாண் துறை அசத்தல்
ADDED : மே 29, 2025 09:55 PM
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில், 16,255 ஏக்கர் பரப்பளவில் நாற்றங்கால் பண்ணை அமைத்து, 10,735 டன் தரமான விதை நெல்லை, வேளாண் துறையினர் உற்பத்தி செய்துள்ளனர். இலக்கை தாண்டி வழங்கப்பட்டுள்ளதால், நெல் பயிரிடும் பரப்பும் அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய இரு மாவட்டங்களில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் உட்பட 13 ஒன்றியங்களில், 3.50 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன.
இதில், சம்பா, நவரை, சொர்ணவாரி ஆகிய மூன்று பருவங்களிலும், 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
ஒவ்வொரு பருவத்திற்கும், நெல் அறுவடை செய்யும் போது, நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு குழுவினர், நெல் கொள்முதல் செய்கின்றனர்.
தவிர, ஒரு சில விவசாயிகள், வேளாண் துறையினருக்கு விதைக்கு உற்பத்தி செய்து, நெல் விற்று வருகின்றனர்.
இது, நுகர்பொருள் வாணிப கழகத்தில் வழங்கப்படும் தொகையை விட, 10 ரூபாய் கூடுதல் வருவாய் விவசாயிகளுக்கு கிடைக்கிறது.
இது ஒருபுறமிருக்க நெல், ராகி, கம்பு ஆகிய சிறு தானியங்கள்; பச்சை பயறு, உளுந்து ஆகிய வகை பயறு வகைகள்; வேர்க்கடலை ஆகிய எண்ணெய் வித்து பயிர்களும் விளைவிக்கப்படுகின்றன.
ஆண்டுதோறும் குறிப்பிட்ட இலக்கு நிர்ணயம் செய்து, நாற்றங்கால் பண்ணை அமைத்து, தரமான விதைகளை வேளாண் துறையினர் உற்பத்தி செய்கின்றனர்.
அந்த வகையில், 2021 - 22ல் 3,740 ஏக்கர்; 2022 - 23ல் 4,115 ஏக்கர்; 2023 - 24ல் 1,468 ஏக்கர்; 2024 - 25ல் 4,777 ஏக்கர் என, மொத்தம் நான்கு ஆண்டுகளில், 16,255 ஏக்கர் நிலத்தில் விதை பண்ணை அமைத்து, 10,735 டன் விதைகள் உற்பத்தி செய்துள்ளனர்.
இந்த விதைகளை, தேவைப்படும் விவசாயிகளுக்கு வேளாண் துறையினர் வழங்கி, நெல் பயிரிடும் பரப்பை அதிகப்படுத்தி உள்ளனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் விதை சான்றளிப்பு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய இரு மாவட்டங்களிலும், தரமான விதைகளை உற்பத்தி செய்து கொடுக்க, துறை ரீதியாக இலக்கு நிர்ணயம் செய்யப்படுகிறது.
அந்த வகயைில் 1,450 ஏக்கருக்கு விதை நெல் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்தோம். அதை தாண்டி 1,900 ஏக்கருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், விதை பண்ணைகளை அமைத்து, தரமான விதை நெல்லை தேர்வு செய்து, விதைக்கு ஏற்ப பக்குவப்படுத்தி விவசாயிகளுக்கு வழங்கி வருகிறோம்.
இதனால், கூடுதல் மகசூல் மற்றும் களையின்றி பயிர் விளையும் வகையிலான விதைகளை தந்துள்ளோம். இதனால், அதிக மகசூல் எடுத்து, விவசாயிகளுக்கு விலையும் கூடுதலாக கிடைக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர்-