/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு தேர்வு...73 ஊராட்சிகள்!:விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்படுத்த நடவடிக்கை
/
செங்கையில் வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு தேர்வு...73 ஊராட்சிகள்!:விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்படுத்த நடவடிக்கை
செங்கையில் வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு தேர்வு...73 ஊராட்சிகள்!:விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்படுத்த நடவடிக்கை
செங்கையில் வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு தேர்வு...73 ஊராட்சிகள்!:விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்படுத்த நடவடிக்கை
ADDED : ஜூன் 29, 2024 12:17 AM
செங்கல்பட்டு:வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, செங்கல்பட்டு மாவட்டத்தில் 73 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு மாவட்டத்தில், வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், 73 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இத்திட்டத்தில், தரிசு நிலங்களை பயிர் சாகுபடிக்கு ஏற்றவாறு கொண்டுவருவதற்கு, 10 முதல் 15 ஏக்கர் வரை, தொடர்ச்சியாக உள்ள தரிசு நிலங்களைக் கண்டறிந்து, தொகுப்பாக மாற்றப்படுகிறது.
இங்கு, பாசன வசதி அமைத்து, பலன் தரும் மரப்பயிர், பழ மரங்கள் சாகுபடி செய்ய, தரிசு நிலங்களில் உள்ள முட்புதர்களை அகற்றி, சமன் செய்து உழுவதற்கு, 2.5 ஏக்கருக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
அதிகபட்சமாக, 9,600 ரூபாய் வரை, பின்னேற்பு மானியமாக விவசாயிகளுக்கு, வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய நிலங்களில், வரப்புகளில் பயறு சாகுபடியை ஊக்குவிக்க, 2.5 ஏக்கருக்கு, 5 கிலோ பயறு விதைகளுக்கு, 50 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சமாக 300 ரூபாய் வழங்கப்படுகிறது.
சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத மற்றும் உயிரியல் முறையில் நுண்ணுாட்ட சத்துக்கள் பயிர்களுக்கு கிடைக்கப்பெற்று, உற்பத்தியை அதிகரிக்க, ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை உத்திகள் இத்திட்டத்தின் வாயிலாக செயல்படுத்தப்படுகின்றன.
ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மைக்கு தேவையான உயிரி கட்டுப்பாட்டு காரணிகள், திரவ உயிர் உரங்கள், தொழு உரம், நுண்ணுாட்டக் கலவைகளை பயிர்களுக்கு இடுவதற்கு, 2.5 ஏக்கருக்கு மானியமாக 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 1,500 ரூபாய் வழங்கப்படுகிறது.
விசைத் தெளிப்பான்களுக்கு 50 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சமாக 3,000 ரூபாய் மானியத்தில் வழங்கப்படும்.
விருப்பம் உள்ள விவசாயிகள், தங்களுக்கு தேவையான இனத்தில், 'உழவன்' செயலியில் பதிவு செய்தோ, அல்லது சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தையோ அணுகி பயன்பெறலாம்.
தடுப்பணை, கற்பாறை அணை, அமிழ்வு நீர் குட்டைகள், சமுதாய உறிஞ்சுக் குழி, மரக்கன்றுகள் நடவு, சாலையோர மரங்கள் நடுதல், வயலுக்குச் செல்லும் வண்டிப்பாதை, வாய்க்கால்கள் துார் வாருதல், உலர்களம், பண்ணைக் குட்டைகள், உறை கிணறு, சேமிப்புக்கிடங்கு உள்ளிட்ட பல்வேறு பணிகள், இத்திட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை வாயிலாக செயல்படுத்தப்படுகின்றன.
விவசாயிகள் அனைவரும், தங்களுடைய நில உரிம விபரம், பட்டா, சிட்டா, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகிய விபரங்களுடன், சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர்களை தொடர்பு கொண்டு பதிவு செய்து பயன்பெறலாம் என, வேளாண்மை இணை இயக்குனர் அசோக் தெரிவித்தார்.
விவசாயிகள், ஒரு ஏக்கர் அளவுள்ள நிலத்தை மூன்று ஆண்டுகள் தரிசாக வைத்திருந்தால், தரிசு நில திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும். பழ வகை மரச்செடிகள் சாகுபடி செய்வதால், விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் கிடைக்கும். இத்திட்டத்தில் தகுதியான விவசாயிகள் தேர்வு செய்யப்படுவர்.
- ஆர்.அசோக்,
மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர்,
செங்கல்பட்டு மாவட்டம்.