/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மண்புழு உரம் உற்பத்தி செய்ய செங்கை விவசாயிகளுக்கு அழைப்பு
/
மண்புழு உரம் உற்பத்தி செய்ய செங்கை விவசாயிகளுக்கு அழைப்பு
மண்புழு உரம் உற்பத்தி செய்ய செங்கை விவசாயிகளுக்கு அழைப்பு
மண்புழு உரம் உற்பத்தி செய்ய செங்கை விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : அக் 18, 2024 08:30 PM
செங்கல்பட்டு:விவசாயிகள் மண்புழு உரம் உற்பத்தி செய்து, மண்ணிற்கு வளம் சேர்த்து, அதிக மகசூல் பெறலாம் என, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, வேளாண்மை இணை இயக்குனர் செல்வபாண்டியன் அறிக்கை:
தற்போதுள்ள தொழில் முறை வேளாண்மையில், உற்பத்தி அதிகரிப்பிற்கென அதிக அளவில் ரசாயன உரங்கள், களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றை பயன்படுத்தப்படுகின்றன.
இதனால், மண்ணில் உள்ள நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைந்து, மண் வளமும் குன்றியுள்ளது. நிலங்கள் பாழ்பட்டு, அதிக அளவில் களர் உவர் அமில நிலங்களாக மாறி வருகின்றன.
தொடர்ந்து இதே நிலை நீடித்தால், மலடான மண்ணைத் தான் நம் எதிர்கால தலைமுறையினருக்கு, நாம் விட்டுச்செல்லும் நிலை ஏற்படும்.
இதனால், வேதிப்பொருட்களின் எச்சம் இல்லாத வேளாண் விளைபொருட்களை மக்களுக்கு விளைவித்து கொடுக்கும் உயிர்ம வேளாண்மையை ஊக்குவிக்கும் அடிப்படையில், முதல்வரின் மண்ணுயிர் காத்து, மன்னுயிர் காப்போம் என்ற புதிய திட்டம் - 2024- - 25ம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில், மண்புழு உரம் தயாரித்து மண் வளத்தை மேம்படுத்தும் வகையில், விவசாயிகளுக்கு மண்புழு உரப்படுக்கைகள் வழங்கப்பட உள்ளன.
விவசாயிகளை மண்புழு உரம் உற்பத்தி செய்து பயன்படுத்த ஊக்குவிப்பதன் வாயிலாக, மண்ணில் உயிர்ம கரிமச்சத்தினை அதிகரித்து, மண் வளத்தினை மேம்படுத்துவதுடன் பண்ணைக் கழிவுகளை மறுசூழற்சி செய்யலாம்.
மேற்கண்ட திட்டத்தில், ஒரு விவசாயிக்கு இரண்டு மண்புழு உரப்படுக்கைகள், 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளன. குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் விவசாய நிலம் வைத்துள்ள, கடந்த இரண்டு வருடங்களில், பிற ஒன்றிய, மாநில அரசு திட்டங்களில் மண்புழு உரப்படுக்கை பெறாத அனைத்து விவசாயிகளும் பயன்பெற தகுதியுடையவர்கள்.
விவசாயிகள், நேரடியாக உழவன் செயலில் பதிவு செய்து, பயனை எளிதில் பெறலாம். வட்டார வேளாண் விரிவாக்க மையங்கள் வாயிலாகவும் பெறலாம். மேலும் விபரங்களுக்கு, அந்தந்த வட்டார வேளாண் துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.