/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பொக்லைன் வாடகையில் ரூ. பல லட்சம் சுருட்டல் முறைகேடு காட்டாங்கொளத்துார் ஒன்றிய ஊராட்சிகளில் மோசடி
/
பொக்லைன் வாடகையில் ரூ. பல லட்சம் சுருட்டல் முறைகேடு காட்டாங்கொளத்துார் ஒன்றிய ஊராட்சிகளில் மோசடி
பொக்லைன் வாடகையில் ரூ. பல லட்சம் சுருட்டல் முறைகேடு காட்டாங்கொளத்துார் ஒன்றிய ஊராட்சிகளில் மோசடி
பொக்லைன் வாடகையில் ரூ. பல லட்சம் சுருட்டல் முறைகேடு காட்டாங்கொளத்துார் ஒன்றிய ஊராட்சிகளில் மோசடி
ADDED : அக் 27, 2025 10:02 PM

காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில் உள்ள, 39 ஊராட்சிகளிலும், 'பொக்லைன்' வாகனங்கள் வாடகைக்கு எடுப்பதில், கூடுதல் வாடகை கட்டணம், கூடுதல் நேரம் என கணக்கு காண்பித்து, முறைகேடு நடக்கிறது. ஆண்டுக்கு பல லட்சம ரூபாய் சுருட்டப்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில், புனித தோமையார் மலை, காட்டாங்கொளத்துார், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், லத்துார், சித்தாமூர், மதுராந்தகம், அச்சிறுபாக்கம் ஆகிய எட்டு ஒன்றியங்களில், 359 ஊராட்சிகள் உள்ளன.
இதில், 193.90 ச.கி.மீ., பரப்பில் உள்ள காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில் 39 ஊராட்சிகளில், 6000க்கும் மேற்பட்ட தெருக்களில், 12 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் வசித்து வருகின்றனர்.
தவிர, 39 ஊராட்சிகளிலும் 18,000க்கும் மேற்பட்ட உட்புற சாலைகள் உள்ளன. இந்த சாலைகளில் 60 சதவீதம் நடக்கவே லாயக்கற்ற நிலையில் படுமோசமாக உள்ளன.
இந்நிலையில், வடிகால் மற்றும் கால்வாய் வசதிகள் முறையாக இல்லாததாலும், ஏரி, குளங்கள், தாங்கல் உள்ளிட்ட நீர் நிலைகள் துார்வாரப்படாததாலும், தற்போது வடகிழக்கு பருவமழையால், பல தெருக்களில் நீர் சூழ்ந்து, வடிய சில நாட்கள் ஆகின்றன.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தெருக்களில் சூழ்ந்துள்ள மழை நீரை அகற்ற, 25க்கும் மேற்பட்ட ஊராட்சியில், 'பொக்லைன்' இயந்திரங்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளன.
தவிர, குப்பையை லாரிகளில் ஏற்றுதல், ஏரி கரைகளை சமன்படுத்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், குழி தோண்டுதல், சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை மண் மூடி நிரப்புதல் உள்ளிட்ட பல அடிப்படை பணிகளுக்கும், தனியாரிடமிருந்து 'பொக்லைன்' வாகனங்கள் வாடகைக்கு எடுக்கப்படுகின்றன.
ஊராட்சிகள் தோறும் 'பொக்லைன்' வாகனங்கள் வாடகைக்கு எடுக்கப்படுவதால், காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில், பல லட்சம் ரூபாய் முறைகேடுகள் நடப்பதாகவும், மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாகவும் பலதரப்பிலிருந்தும் புகார்கள் வந்துள்ளன.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
சிறிய அளவிலான கட்டுமான நிறுவனங்கள் கூட சொந்தமாக 'பொக்லைன்' வாகனங்களை வைத்துள்ளன.
ஆனால், 39 ஊராட்சிகளையும், 60,00க்கும் மேற்பட்ட தெருக்களையும், 18,000க்கும் மேற்பட்ட உட்புற சாலைகளையும் உள்ளடக்கிய காட்டாங்கொளத்துார் ஒன்றிய நிர்வாகம், சொந்தமாக 'பொக்லைன்' வாகனங்களை வாங்காமல், வாடகை முறையில் இயக்கி வருவது, பல கேள்விகளை எழுப்புகிறது.
நகர மயமாக்கல் காரணமாக இந்த ஒன்றியம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதால், 39 ஊராட்சிகளிலும், அரசின் சார்பில், ஏதாவது ஒரு அடிப்படை கட்டுமான பணிகள், தொடர்ந்து நடக்கின்றன.
மேற்கண்ட பணிகள் தவிர, தெருவோரம் வீசப்படும் குப்பையை லாரியில் ஏற்றுதல், சாலைகளை விரிவாக்கம் செய்தல், மேடு பள்ளமான பகுதிகளை சமப்படுத்தல் என, பலகட்ட பணிகளுக்கும், 'பொக்லைன்' வாகனம் அவசியமாக உள்ளது.
எனவே, ஒன்றிய நிர்வாகத்தின் அனுமதியுடன், ஊராட்சி நிர்வாகம் சார்பில் 'பொக்லைன்' வாகனங்கள், வாடகைக்கு எடுக்கப்பட்டு, அதற்கு, ஒரு மணி நேரத்திற்கு 1,200 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை, வாடகை செலுத்தப்படுகிறது.
அதன்படி, 'பொக்லைன்' வாகன வாடகையாக சிறிய ஊராட்சிகள் ஒரு லட்சம் ரூபாயும், பெரிய ஊராட்சிகள் 7 லட்சம் ரூபாய் வரையிலும், ஆண்டிற்கு செலுத்தி வருகின்றன.
மொத்தமுள்ள 39 ஊராட்சிகளையும் சேர்த்து, இந்தத் தொகையை கணக்கிட்டால், ஆண்டிற்கு மூன்று 'பொக்லைன்' வாகனங்கள் வீதம், கடந்த நான்கு ஆண்டுகளில் 12 'பொக்லைன்' வாகனங்களை ஒன்றிய நிர்வாகம் வாங்கியிருக்கலாம்.
தற்போது, குறைந்த திறன் உள்ள 'பொக்லைன்' வாகனம் 20 லட்சம் ரூபாய்க்கும் அதிக திறன் உள்ள வாகனம் 40 லட்சம் ரூபாய்க்கும், பல நிறுவனங்களால் விற்கப்படுகிறது.
தற்போது மழைக்காலம் என்பதாலும், தெருக்களில் தேங்கும் நீரை அப்புறப்படுத்த, சாலைகளை சமன்படுத்த அதிக எண்ணிக்கையில் இந்த வாகனங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன.
வாடகை பணத்தை குறைவாக வழங்கி, அதிகமாக கணக்கு காட்டுவது, பயன்படுத்தப்படும் நேர அளவை கூடுதலாக கணக்கு காட்டுவது என, ஊராட்சி தலைவர்கள் முதல் ஒன்றிய அதிகாரிகள் வரை, 'பொக்லைன்' வாடகை பணத்தில் கணிசமாக போய்ச் சேர்வதால்தான், ஒன்றிய நிர்வாகம் தனக்கென சொந்தமாக 'பொக்லைன்' வாகனத்தை வாங்க மறுப்பதாக கூறப்படுகிறது.
இந்த 'பொக்லைன்' வாகன வாடகையில், ஆண்டு தோறும் பல லட்சம் ரூபாய் நுாதனமாக கொள்ளையடிக்கப்படுகிறது.
எனவே, மக்கள் வரிப்பணம் வீணாகாமல் தடுக்க, ஒன்றிய நிர்வாகம் சார்பில், மூன்று ஊராட்சிகளுக்கு ஒன்று என, 13 புதிய 'பொக்லைன்' வாகனங்களை தவணை முறையிலாவது, முதற் கட்டமாக வாங்கலாம்.
மாதம் தோறும், 'பொக்லைன்' வாகனங்களுக்காக ஊராட்சிகள் செலவிடும் வாடகை பணத்தை வைத்து, தவணை தொகையை கட்டிவிடலாம்.
இதனால், இரண்டு ஆண்டுகளில், 13 வாகனங்கள் சொந்தமாகிவிடும். தவிர, 40க்கும் மேற்பட்டவர்களுக்கு இதன் வாயிலாக வேலை வாய்ப்பும் கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
--------------------------------------------

