/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஜி.எஸ்.டி., சாலையில் காவல் நிலைய எல்லைகளில் கடும்...குழப்பம்:கிளாம்பாக்கத்துடன் ஊரப்பாக்கத்தை இணைப்பது அவசியம்
/
ஜி.எஸ்.டி., சாலையில் காவல் நிலைய எல்லைகளில் கடும்...குழப்பம்:கிளாம்பாக்கத்துடன் ஊரப்பாக்கத்தை இணைப்பது அவசியம்
ஜி.எஸ்.டி., சாலையில் காவல் நிலைய எல்லைகளில் கடும்...குழப்பம்:கிளாம்பாக்கத்துடன் ஊரப்பாக்கத்தை இணைப்பது அவசியம்
ஜி.எஸ்.டி., சாலையில் காவல் நிலைய எல்லைகளில் கடும்...குழப்பம்:கிளாம்பாக்கத்துடன் ஊரப்பாக்கத்தை இணைப்பது அவசியம்
ADDED : ஜூன் 25, 2025 02:22 AM

ஊரப்பாக்கம்:ஊரப்பாக்கம், காரணைபுதுச்சேரி சந்திப்பிலிருந்து, பெருங்களத்துார் வரையிலான ஜி.எஸ்.டி., சாலையில், நான்கு காவல் நிலைய எல்லைகள் உள்ளன. இதில் கூடுவாஞ்சேரி, கிளாம்பாக்கம் என, இரு காவல் நிலையத்தின் கீழும் ஊரப்பாக்கம் ஊராட்சி வருவதால், இதை கிளாம்பாக்கம் காவல் நிலையத்துடன் இணைக்க வேண்டுமென, பகுதிவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.
பெருங்களத்துார் முதல் செங்கல்பட்டு வரையிலான 29 கி.மீ., ஜி.எஸ்.டி., சாலையின் பெரும்பகுதி, தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குள் வருகிறது.
இந்த வழித்தடத்தை சென்னையிலிருந்து,'வெளியேறுதல்', சென்னைக்குள் 'நுழைதல்' என, இரு பிரிவாக காவல் துறை பிரித்துள்ளது.
இதில், 'வெளியேறுதல்' வழித்தடத்தில், பெருங்களத்துார் -இரணியம்மன் கோவில் வரை பீர்க்கன்காரணை காவல் நிலையத்திற்கும், அதிலிருந்து ஊரப்பாக்கத்திற்கு உட்பட்ட காரணைபுதுச்சேரி சந்திப்பு வரை கிளாம்பாக்கம் காவல் நிலையத்திற்கும் எல்லை ஒதுக்கப்பட்டு உள்ளது.
அதாவது, வெளியேறுதல் வகையில், மொத்தமுள்ள 4 கி.மீ., துாரமுள்ள ஜி.எஸ்.டி., சாலை, இரண்டு காவல் நிலையங்களுக்கு எல்லையாக ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால், 'நுழைதல்' என்ற வகையில், காரணைபுதுச்சேரி சந்திப்பு முதல் ஆதனுார் மேம்பாலம் வரை கூடுவாஞ்சேரி காவல் நிலையம், அங்கிருந்து புகாரி ஹோட்டல் வரை கிளாம்பாக்கம் காவல் நிலையம், அதன் பின் இரணியம்மன் கோவில் வரை ஓட்டேரி காவல் நிலையம், அதன் பின் பெருங்களத்துார் வரை பீர்க்கன்காரணை காவல் நிலையம் என, நான்கு காவல் நிலையங்களுக்கு எல்லை ஒதுக்கப்பட்டு உள்ளது.
அதாவது, 4 கி.மீ., சாலையில், ஆறு வகையான காவல் எல்லை பிரிக்கப்பட்டு, அதில் நான்கு காவல் நிலையங்களுக்கான எல்லை உள்ளது என்பது வாகன ஓட்டிகளுக்கோ, பொதுமக்களுக்கோ தெரியாது.
உதாரணமான, சென்னையிலிருந்து வெளியேறுதல் வழித்தடத்தில் காரணைபுதுச்சேரி சந்திப்பில் விபத்து நடந்தால், அதை கிளாம்பாக்கம் போலீசாரும், 'நுழைதல்' பாதையில் விபத்து நடந்தால், அதை கூடுவாஞ்சேரி போலீசாரும் வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டும்.
இதுபோன்ற குழப்பத்தால், புகார் அளிக்க செல்வோர் அலைக்கழிக்கப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து, பொது மக்கள் கூறியதாவது:
இரு சக்கர வாகனம் ஒன்று மையத்தடுப்பில் மோதி, அதில் பயணித்த இருவரும் ஆளுக்கொரு பக்கம் விழுந்தால், இந்த விபத்தை விசாரிப்பதில், இரு காவல் நிலையங்களுக்கும் இடையே குழப்பம் வருகிறது.
காரணை புதுச்சேரி சந்திப்பு அருகே விபத்து என்றால், இதுபோன்று போலீசாருக்கு எல்லை பிரச்னை வருகிறது.
இதுபோல் பல இடங்களில் காவல் நிலைய எல்லை பிரச்னை உள்ளதால், பல நேரங்களில் 'இது எங்கள் எல்லை இல்லை' என, போலீசார் தெரிவித்து, அதன் பின் உரிய காவல் நிலையத்திற்கு தகவல் கூறுகின்றனர்.
அந்த காவல் நிலைய போலீசார் சம்பவ இடம் வந்துசேர, கால தாமதம் ஏற்படுகிறது. தவிர, காவல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிவோருக்கும், இதுகுறித்து உரிய புரிதல் இல்லை.
விபத்து தொடர்பாக அவர்களுக்கு தகவல் வரும் போது, எந்த காவல் நிலையத்திற்கு தகவலைத் தெரிவிப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டு, வேறு காவல் நிலையத்திற்கு அந்த தகவலைக் கூறி விடுகின்றனர்.
ஜி.எஸ்.டி., சாலை மட்டுமின்றி, ஊரப்பாக்கத்திலிருந்து காரணை புதுச்சேரி சந்திப்பு கிராமத்திற்குச் செல்லும் சாலையிலும், இரண்டு காவல் நிலையங்களுக்கான எல்லைப் பிரச்னை குழப்பமாக உள்ளது.
அதாவது, ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி., சாலை சந்திப்பிலிருந்து காரணை புதுச்சேரி சந்திப்பு கிராமத்திற்கு, 30 அடி அகல சாலை செல்கிறது.
இந்த 30 அடி சாலையில், 1,500 மீட்டர் துாரத்தின் இடது பக்கம் கிளாம்பாக்கம் காவல் நிலையத்திற்கும், வலது பக்கம் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கும் எல்லையாக ஒதுக்கப்பட்டுள்ளது.
அதாவது, 'சென்டர் மீடியன்' இல்லாத இந்த சாலை, இரு காவல் நிலையங்களுக்கான எல்லையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
இந்த சாலையில் நடக்கும் விபத்து, தகராறு தொடர்பாக, காவல் உதவி எண்ணிற்கு தகவல் கூறும் போது, அங்கிருந்து கிளாம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.
பின், கிளாம்பாக்கம் போலீசார் நேரில் வந்து பார்க்கும் போது, 'இது எங்கள் எல்லை கிடையாது. கூடுவாஞ்சேரி காவல் எல்லை' எனக் கூறிவிட்டுச் செல்கின்றனர்.
பின், கூடுவாஞ்சேரி போலீசார் வந்து பார்க்கும் போது, 'இது எங்கள் எல்லை கிடையாது. கிளாம்பாக்கம் போலீசார் தான் விசாரிக்க வேண்டும்' என்கின்றனர். இதுபோன்று பலமுறை குழப்பங்கள் நிகழ்ந்துள்ளன.
ஊரப்பாக்கம் ஊராட்சியில், பாதிக்கு மேற்பட்ட பகுதிகள், கூடுவாஞ்சேரி காவல் நிலைய எல்லையின் கீழ் வருகின்றன.
இப்பகுதியில் வசிப்போர், பாஸ்போர்ட் விசாரணை, தடையில்லா சான்று உள்ளிட்ட பல முறையீடுகளுக்கு, கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டி உள்ளது.
இந்நிலையில், கிளாம்பாக்கம் என்பது ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு வார்டு என்பதால், கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தின் கீழ் வரும் ஊரப்பாக்கம் பகுதிகளை, கிளாம்பாக்கம் காவல் நிலையத்துடன் இணைக்க வேண்டும்.
ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள காவல் எல்லை குழப்பத்தை தீர்க்க, ஊரப்பாக்கம் ஊராட்சியின் அனைத்து பகுதிகளும், கிளாம்பாக்கம் காவல் எல்லைக்குள் வரும்படி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.