/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆட்சீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷம் விமரிசை
/
ஆட்சீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷம் விமரிசை
ADDED : டிச 29, 2024 01:32 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கத்தில் தொண்டை நாட்டு சிவ ஸ்தலங்களில் ஒன்றானதும், சைவ சமய குறவர்களால் பாடல் பெற்றதுமான, புகழ்பெற்ற இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவில் ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.
இக்கோவிலில், நேற்று, மார்கழி மாத சனி பிரதோஷ வழிபாடு வெகு விமரிசையாக நடந்தது.
இதில், நந்தியம் பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், தேன், உள்ளிட்டவற்றால், அபிஷேகம் செய்யப்பட்டது.
வெள்ளிக்கவசம் அணிவித்து, கோவில் சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க, மேல தாளங்கள் ஒலிக்க, சங்கொலி முழங்க மஹா தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து, நந்தி வாகனத்தில் ஆட்சீஸ்வரரும், இளங்கிளி அம்மனும், கோவிலின் உட்பிரகாரத்தில், வலம் வந்து, அருள் பாலித்தனர்.
* திருப்போரூரில் பிரசித்தி பெற்ற பிரணவ மலை அமைந்துள்ளது. அகத்திய முனிவர், சிவபெருமானிடம் பிரணவத்தின் பொருளை கேட்க, பிரணவமே மலையாக உருவெடுத்ததால், பிரணவமலை என்று அழைக்கப்படுவதாக கூறப்படும் இங்கு, பாலாம்பிகை உடனுறை கைலாசநாதர் கோவில் உள்ளது.
இக்கோவிலில், மகா சனி பிரதோஷ விழா நேற்று நடந்தது.
இதில், மாலை, 4:30 மணிக்கு நந்தியம் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, பின், பாலாம்பிகை அம்மனுக்கும், கைலாசநாதருக்கும், அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.
பின், உற்சவ மூர்த்தி பல்லக்கில் எழுந்தருளினார். மூன்று முறை கோவிலை வலம் வந்த உற்சவருக்கு, ஈசான மூலையில், தீபாராதனை நடந்தது.
பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்களும், உள்ளூர்வாசிகளும் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர்.
* கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகில் உள்ள, மாமர சுயம்பு சித்தி விநாயகர் கோவிலில் நேற்று, சனி பிரதோஷத்தை முன்னிட்டு, மாலை 5.00 மணியளவில் மாமரந்தீஸ்வரருக்கு பல விதமான அபிஷேகef நடைபெற்றது.
தொடர்ந்து, மாமரத்தீஸ்வரர் லலிதா பரமேஸ்வரி அம்மன் அலங்கரிக்கப்பட்ட, ரதத்தில் கோவில் உட்பிரகார வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நந்திவரத்தில் உள்ள, நந்தீஸ்வரர் கோவில், ஊரப்பாக்கத்தில் உள்ள ஊரணிஸ்வரர் கோவில்களில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு, சிறப்பு பூஜை நடந்தது.