/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கணித தேர்வுக்கு அறிவியல் வினாத்தாள் 10ம் வகுப்பு திருப்புதல் தேர்வில் அதிர்ச்சி
/
கணித தேர்வுக்கு அறிவியல் வினாத்தாள் 10ம் வகுப்பு திருப்புதல் தேர்வில் அதிர்ச்சி
கணித தேர்வுக்கு அறிவியல் வினாத்தாள் 10ம் வகுப்பு திருப்புதல் தேர்வில் அதிர்ச்சி
கணித தேர்வுக்கு அறிவியல் வினாத்தாள் 10ம் வகுப்பு திருப்புதல் தேர்வில் அதிர்ச்சி
ADDED : ஜன 30, 2025 02:12 AM
செங்கல்பட்டு,:செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆகிய இரண்டு கல்வி மாவட்டங்களில் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என, 157 பள்ளிகள் உள்ளன.
இப்பள்ளிகளில் கடந்த 27ம் தேதியில் இருந்து, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் திருப்புதல் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.
நேற்று காலை கணித தேர்வு நடைபெற இருந்தது. இதில், நந்திவரம் - கூடுவாஞ்சேரி, வண்டலுார் உள்ளிட்ட 38 பள்ளிகளுக்கு, கணிதம் என எழுதி 'சீல்' இடப்பட்ட உறைகளில், அறிவியல் பாடத்திற்கான வினாத்தாள்கள் இருந்துள்ளன.
இதைக் கண்ட பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்து, உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே உயரதிகாரிகள், கணித தேர்வுக்கான வினாத்தாள்களை குறிப்பிட்ட பள்ளி தலைமையாசிரியர்களுக்கு 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பி உள்ளனர்.
தொடர்ந்து, தலைமையாசிரியர்கள் கடைகளுக்குச் சென்று 'ஜெராக்ஸ்' எடுத்து, மாணவர்களுக்கு வினியோகம் செய்து, கணித தேர்வு நடத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தை அறிந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள், தேர்வு நடத்துவதில் கூட கல்வித்துறை அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதுகுறித்து, காட்டாங்கொளத்துார் வட்டார வினாத்தாள் கட்டு காப்பாளரான, நந்திவரம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியையை மொபைல்போன் வாயிலாக தொடர்பு கொண்டு கேட்ட போது, இதுபோன்ற சம்பவம் ஏதும் நடைபெறவில்லை என தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை மொபைல் போனில் தொடர்பு கொண்ட போது, அவர் அழைப்பை எடுக்கவில்லை.

