/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மதுராந்தகம் கோட்டத்தில் கால்நடை மருத்துவர்கள் பற்றாக்குறை: உரிய கிசிச்சை கிடைக்காமல் கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம்
/
மதுராந்தகம் கோட்டத்தில் கால்நடை மருத்துவர்கள் பற்றாக்குறை: உரிய கிசிச்சை கிடைக்காமல் கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம்
மதுராந்தகம் கோட்டத்தில் கால்நடை மருத்துவர்கள் பற்றாக்குறை: உரிய கிசிச்சை கிடைக்காமல் கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம்
மதுராந்தகம் கோட்டத்தில் கால்நடை மருத்துவர்கள் பற்றாக்குறை: உரிய கிசிச்சை கிடைக்காமல் கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம்
UPDATED : அக் 29, 2025 03:28 AM
ADDED : அக் 29, 2025 12:34 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் மற்றும் செய்யூர் பகுதிகளில் கால்நடை மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளதால், உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல், நோய் வாய்ப்பட்ட கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் மற்றும் செய்யூர் தாலுகாவில் உள்ள 400க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில், விவசாயத்திற்கு அடுத்து கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அச்சிறுபாக்கம், லத்துார், மதுராந்தகம், சித்தாமூர் ஒன்றியங்களில் 1.20 லட்சத்திற்கும் அதிகமான மாடுகள் உள்ளன. 3 லட்சத்திற்கும் அதிகமான செம்மறி ஆடுகள், 2 லட்சத்திற்கும் அதிகமான வெள்ளாடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
மதுராந்தகம் மற்றும் செய்யூர் தாலுகாவில் மொத்தம், 28 அரசு கால்நடை மருத்துவமனைகள், 7 கால்நடை மருந்தகங்கள் இயங்கி வருகின்றன.
கால்நடை வளர்ப்பவர்கள் தங்கள் கால்நடைகளுக்கு ஏதேனும் நோய் மற்றும் உடல்நலக் குறைவு ஏற்பட்டால், மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று, சிகிச்சை அளித்து வந்தனர்.
ஆனால், கடந்த பல ஆண்டுகளாக, இந்த இரு வட்டாரத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைகளில், தற்போது 10க்கும் குறைவான மருத்துவர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.
கப்பிவாக்கம், சூணாம்பேடு, கயப்பாக்கம், செங்காட்டூர், படாளம் உள்ளிட்ட 14 கால்நடை மருத்துவமனைகளில், மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது.
இதனால், ஒரே மருத்துவர் நீண்ட துாரம் பயணம் செய்து, பொறுப்பு கால்நடை மருத்துவராக வேறு ஒரு மருத்துவமனையில் பணியாற்ற வேண்டிய சூழல் உள்ளதால், மருத்துவர்கள் மிகுந்த அலைச்சலுக்கு ஆளாகின்றனர்.
ஆண்டுக்கு இருமுறை கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசிகள், சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி, சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது தவிர தினமும் காலை 8:00 மணி முதல் மதியம் 12:00 மணி, மதியம் 3:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதற்கு ஒரு உதவி மருத்துவர், ஒரு ஆய்வாளர், ஒரு உதவியாளர் என மூவரும், கிளை நிலையத்திற்கு ஒரு ஆய்வாளர் வீதம் நியமிக்கப்பட்டு, கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான மருந்தகங்களில் உதவியாளர்கள், ஆய்வாளர்கள் பணியிடங்களும் காலியாகவே உள்ளன.
இதனால், கால்நடைகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல், அவை உயிரிழக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றன.
இதனால், சில விவசாயிகள் ஓய்வு பெற்ற மருத்துவர்கள், ஊழியர்களை தேடிக் கண்டுபிடித்து, செலவு செய்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். பல விவசாயிகள் தனியார் மருந்தகங்களில் மருந்து, ஊசி வாங்கி, சுயமாக சிகிச்சை அளிக்கின்றனர்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் கால்நடை மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இருப்பினும், அதிகமாக கால்நடைகள் உள்ள மதுராந்தகம் மற்றும் செய்யூர் தாலுகாவில் உள்ள மருத்துவமனைகளில் கால்நடை மருத்துவர்கள் இல்லாதது, அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, காலி மருத்துவப் பணியிடங்களை விரைவில் நிரப்ப, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோரிக்கை எழுந்துள்ளது.

