/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சித் தேரி ஏரி சீரமைப்பு பணிகள் பொதுப்பணித்துறை முட்டுக்கட்டை
/
சித் தேரி ஏரி சீரமைப்பு பணிகள் பொதுப்பணித்துறை முட்டுக்கட்டை
சித் தேரி ஏரி சீரமைப்பு பணிகள் பொதுப்பணித்துறை முட்டுக்கட்டை
சித் தேரி ஏரி சீரமைப்பு பணிகள் பொதுப்பணித்துறை முட்டுக்கட்டை
ADDED : ஜூன் 26, 2025 02:09 AM

பவுஞ்சூர்:ஊரக வளர்ச்சித்துறை சார்பில், சித்தேரி ஏரியை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்க இருந்த நிலையில், பணிகளை நிறுத்த வேண்டுமென பொதுப்பணித் துறை கடிதம் வழங்கி உள்ளதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
பவுஞ்சூர் அடுத்த திருவாதுார் கிராமத்தில், 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட சித்தேரி உள்ளது.
இந்த சித்தேரி வாயிலாக, 300க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள், நீர்ப்பாசனம் பெறுகின்றன.
இப்பகுதியில் அதிக அளவில், நெல் பயிர் விவசாயம் செய்யப்படுகிறது.
குடியிருப்பு பகுதி மற்றும் வயல்வெளிகளில் இருந்து வெளியேறும் மழைநீர், வரத்து கால்வாய் வழியாக சித்தேரி ஏரிக்கு வந்தடைகிறது.
திருவாதுார் ஏரியில் இருந்து உபரி நீர், கலங்கல் மற்றும் மதகுகள் வழியாக வெளியேறி, கால்வாய் வாயிலாக, விவசாய நிலங்களுக்குச் செல்கிறது.
பல ஆண்டுகளாக இந்த திருவாதுார் ஏரி துார் வாரி சீரமைக்கப்படாமல் உள்ளதால், மழைக்காலத்தில் ஏரியில் போதிய தண்ணீரை தேக்க முடியவில்லை.
இதனால், அதிகப்படியான தண்ணீர் கலங்கல் வழியாக, உபரிநீராக வெளியேறுகிறது.
மேலும், ஏரியின் உபரிநீர் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால், மழைக்காலத்தில் தண்ணீர் செல்ல வழியின்றி, வயல்வெளியில் பாய்ந்து, நெற்பயிர்கள் சேதமடைகின்றன.
உபரிநீர் கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், ஊரக வளர்ச்சித்துறை சார்பாக, 12.67 லட்சம் ரூபாயில் ஏரியை சீரமைத்து, 1.9 கி.மீ., துாரத்திற்கு, நெசப்பாக்கம் ஏரிக்குச் செல்லும் உபரிநீர் கால்வாயை சீரமைக்க, நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், சித்தேரி ஏரி பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால், ஊரக வளர்ச்சித்துறை சார்பாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள தடை விதித்து, பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர், லத்துார் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கடிதம் அளித்துள்ளார்.
இதனால், சித்தேரி ஏரியை சீரமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.