/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நத்தம் நிலத்தில் இலவச பட்டாக்கள் வழங்கியதில்... முறைகேடு விசாரித்து ரத்து செய்ய சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
/
நத்தம் நிலத்தில் இலவச பட்டாக்கள் வழங்கியதில்... முறைகேடு விசாரித்து ரத்து செய்ய சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
நத்தம் நிலத்தில் இலவச பட்டாக்கள் வழங்கியதில்... முறைகேடு விசாரித்து ரத்து செய்ய சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
நத்தம் நிலத்தில் இலவச பட்டாக்கள் வழங்கியதில்... முறைகேடு விசாரித்து ரத்து செய்ய சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
ADDED : அக் 06, 2025 10:28 PM

செங்கல்பட்டு :மதுராந்தகம் வருவாய் கோட்டத்தில், நத்தம் வகைப்பாடு நிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு, முறைகேடாக வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதனால், மாவட்டம் முழுதும் இதேபோல வழங்கப்பட்ட பட்டாக்கள் குறித்து விசாரணை செய்து, தகுதியில்லாதவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்கள் உள்ளன.
இந்த தாலுகாக்களுக்கு உட்பட்ட கிராமங்களில் வீடு இல்லாதவர்கள் மற்றும் நத்தம் வகைப்பாடு நிலங்களில் வீடு கட்டி வசித்து வந்த மக்கள், தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என, கலெக்டர் மற்றும் முதல்வரிடம் மனுக்கள் அளித்தனர்.
இந்த மனுக்களை பரிசீலனை செய்து, வீடு இல்லாதவர்களுக்கு 'நத்தம் நில வரி' திட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க, 1996ம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த திட்டத்தில் ஒரு நபருக்கு, 33 சென்ட் நிலம் வரை இலவச வீட்டுமனை பட்டாவாக வழங்க, அரசு உத்தரவில் இடம்பெற்றது. அதன் பின், பொதுமக்கள் அளித்த மனுக்களை வருவாய்த் துறையினர் ஆய்வு செய்து, வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்க, அரசுக்கு அறிக்கை அனுப்பினர்.
அதன் பின், தகுதியானோருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க, அரசு உத்தரவிட்டது. இந்த திட்டத்தில், அச்சிறுபாக்கம் அடுத்த கேசவராயன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவருக்கு, 'நத்தம் நில வரி' திட்டத்தின் கீழ், 8 சென்ட் நிலத்திற்கு இலவச வீட்டுமனை பட்டாவை, வருவாய்த்துறை வழங்கியது.
இந்நிலையில், அதே குடும்பத்தைச் சேர்ந்த கிருஷ்ணனின் மனைவி தனம் என்பவருக்கு, 2 சென்ட், மருமகள் தவமணி என்பவருக்கு 2 சென்ட், மகள் சந்தியா என்பவருக்கு 1.50 சென்ட் என, மொத்தம் 5.5 சென்ட் இலவச வீட்டுமனை பட்டாவை, 2021ம் ஆண்டு செய்யூர் தாசில்தார் வழங்கினார்.
இது, அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு, இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என, மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியரிடம், 2023ம் ஆண்டு, சமூக ஆர்வலர் ரவிச்சந்திரன் என்பவர் மனு அளித்தார்.
இந்த மனுவை விசாரித்த மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் ரம்யா, கிருஷ்ணன் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கும் வழங்கிய இலவச வீட்டுமனை பட்டாவை ரத்து செய்யும்படி, செய்யூர் தாசில்தாருக்கு, கடந்த செப்., 12ம் தேதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள எட்டு தாலுகாக்களிலும், நத்தம் நில வரி திட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அதன் பின் தாம்பரம், பல்லாவரம், வண்டலுார், செங்கல்பட்டு ஆகிய தாலுகாக்களில்,'பெல்ட் ஏரியா' எனும், பட்டா வழங்க தடையுள்ள பகுதிகளில் வசிக்கும், 26,000க்கும் மேற்பட்ட மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை, கடந்த ஆக., 9ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இந்த திட்டத்திலும், ஏற்கனவே இலவச வீட்டுமனை பட்டா பெற்றவர்களுக்கே, மீண்டும் பட்டா வழங்கப்பட்டுள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த சந்தேகம் வலுத்துள்ளதால், மாவட்டத்தில் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாக்கள் குறித்து விசராணை செய்து, தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய, கலெக்டர் சினேகா நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.