/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'செல்வமகள்' சேமிப்பு திட்டத்திற்கு சிறப்பு மேளா
/
'செல்வமகள்' சேமிப்பு திட்டத்திற்கு சிறப்பு மேளா
ADDED : பிப் 20, 2025 11:56 PM
செங்கல்பட்டு, :செங்கல்பட்டு மாவட்டத்தில், 'செல்வமகள்' சேமிப்பு திட்டத்தில் கணக்கு துவங்க சிறப்பு மேளா, தபால் அலுவலகங்களில் இன்று துவங்குகிறது.
இதுகுறித்து, செங்கல்பட்டு கோட்ட கண்காணிப்பாளர் சண்முகச்சாமி வெளியிட்ட அறிக்கை:
அஞ்சல் துறையில், பெண் குழந்தைகள் நலனுக்காக,'செல்வமகள்' சேமிப்பு திட்டத்தை, 2015ம் ஆண்டு, மத்திய அரசு அறிமுகம் செய்தது.
இத்திட்டத்தின் கீழ், 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்காக பெற்றோர், பாதுகாவலர் கணக்கு துவங்கலாம்.
குறைந்தபட்சம், ஒரு நிதியாண்டிற்கு 250 ரூபாய் முதல் 1.5 லட்சம் ரூபாய் செலுத்தி கணக்கைத் துவக்கலாம். இதற்கு 8.2 சதவீத வட்டி கிடைக்கும்.
இத்திட்டத்தின் கீழ் செய்யப்படும் வைப்புத்தொகைக்கு வருமான வரிச்சட்டத்தின் பிரிவு '80சி'யின் கீழ், ஒரு நிதியாண்டிற்கு 1.5 லட்சம் ரூபாய் வரை வரிச்சலுகை வழங்கப்படுகிறது. கணக்கு துவங்கி 21 ஆண்டுகள் முடிவில், முதிர்ச்சி தொகை கிடைக்கும்.
அதற்கு முன் உயர்கல்விக்காக, 10ம் வகுப்பு முடிந்து அல்லது 18 வயது கடந்தால், 50 சதவீத தொகையை எடுக்கலாம்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, அச்சிறுபாக்கம், கல்பாக்கம், மதுராந்தகம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், கூடுவாஞ்சேரி ஆகிய தபால் அலுவலகங்களில், செல்வ மகள் சேமிப்பு கணக்கு துவங்க, சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இங்கு, செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு துவங்க சிறப்பு மேளா இன்றும், வரும் 28ம் தேதி மற்றும் மார்ச் 10ம் தேதி நடக்கிறது.
கிளை தபால் அலுவலகங்கள் உட்பட அருகிலுள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும், செல்வமகள் சேமிப்பு கணக்கை துவக்கலாம். இந்த வாய்ப்பை, பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.