தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மாமல்லையில் ஆரோக்கிய உணவு வீதி திட்டம்... இழுபறி!:நிர்வாக குளறுபடிகளால் 3 ஆண்டுகளாக முடக்கம்

மாமல்லையில் ஆரோக்கிய உணவு வீதி திட்டம்... இழுபறி!:நிர்வாக குளறுபடிகளால் 3 ஆண்டுகளாக முடக்கம்

மாமல்லையில் ஆரோக்கிய உணவு வீதி திட்டம்... இழுபறி!:நிர்வாக குளறுபடிகளால் 3 ஆண்டுகளாக முடக்கம்


UPDATED : செப் 27, 2026 02:07 AM

ADDED : செப் 26, 2026 07:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 27, 2026 02:07 AM ADDED : செப் 26, 2026 07:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாமல்லபுரம்: மத்திய அரசின் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில், மாமல்லபுரத்தில் செயல்படுத்துவதாக அறிவிக்கப்பட்ட, 'ஆரோக்கிய சுகாதார உணவு வீதி' திட்டம், நிர்வாக குளறுபடிகளால் மூன்று ஆண்டுகளாக இழுபறியாக இருக்கிறது. மாமல்லபுரம் நகராட்சியாக மாற்றப்பட்ட பின், பேரூராட்சி இயக்குநரக அதிகாரிகள், அரசு ஒதுக்கிய நிதியை விடுவிப்பதில் சுணக்கம் காட்டி வருகின்றனர்.

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக மாமல்லபுரம் சிற்ப பகுதிகள் உள்ளன. அர்ச்சுனன் தபசு, கடற்கரை கோவில் உள்ளிட்ட கலை சிற்பங்களை காண, மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வரும் பயணியர் விரும்பி உண்ணும் வகையில், ஆரோக்கியமான உணவுகள் இல்லை.

இதனால், உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற சுகாதாரமான, தரமான உணவு வகைகளை வழங்குவதற்காக, மத்திய சுகாதார அமைச்சகம், நாடு முழுதும் 100 சுற்றுலா பகுதிகளில், ஆரோக்கிய மற்றும் சுகாதார உணவு வீதி திட்டத்தை செயல்படுத்த முடிவெடுத்தது. மாமல்லபுரத்திற்கும் இதில் இடமுண்டு.

தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ், இந்திய உணவு பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம், வீட்டு வசதி, நகர்ப்புற அமைச்சகத்திடம் ஆலோசிக்கப்பட்டது.

பின், உணவு பாதுகாப்புத்துறை வாயிலாக 100 சுற்றுலா தலங்களுக்கும் தலா ஒரு கோடி ரூபாய் என மொத்தம் 100 கோடி ரூபாய், 2023ல் ஒதுக்கப்பட்டது.

பல்லவ சிற்பக்கலைக்கு புகழ்பெற்ற மாமல்லபுரத்திற்கு ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் செயல்படுத்த, அன்றைய பேரூராட்சி நிர்வாகம் முடிவெடுத்தது.

அதே இடத்தில், மத்திய அரசின் 'சுவதேஷ் தர்ஷன் - 2.0' திட்டத்தையும் செயல்படுத்த திட்டமிடப்பட்டு, இரண்டு திட்டங்களிலும், பயணியர் அடிப்படை வசதிகள் ஒரே மாதிரியாக இடம்பெற்றதால், உணவு வீதி திட்டத்தை வேறு நகர பகுதியில் செயல்படுத்த, நகராட்சி நிர்வாகம் முடிவெடுத்தது.

சுற்றுலா பகுதிக்கே இத்திட்டம் என்பதால், மீண்டும் மாமல்லபுரத்திற்கே மாற்றப்பட்டது. முதலில் 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, 24.25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கடற்கரை கோவில் அருகில், கான்கிரீட் கல் சாலை அமைக்க, 2024ம் ஆண்டு தனியார் நிறுவனத்திற்கு 'டெண்டர்' விடப்பட்டது.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான இடம் என்பதால், முறையான அனுமதி பெறவில்லை எனக்கூறி, அத்திட்டத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

நிர்வாக குளறுபடிகளில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக, மாமல்லபுரம் நகராட்சியாக மேம்பட்ட பிறகும், மூன்று ஆண்டுகளாக ஆரோக்கிய சுகாதார உணவு வீதி திட்டம், செயல்பாடிற்கு கொண்டு வரப்படாமல் இழுபறியில் உள்ளது.

கடலோர ஒழுங்கு மண்டலம் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றாமல், இதுபோன்ற முக்கிய திட்டங்களை தமிழக அரசு தொடங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:

மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகமாக இருந்தபோது, ஆரோக்கிய சுகாதார உணவு திட்டத்திற்கு ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. தற்போதும் பேரூராட்சி இயக்குநரக நிர்வாகத்திடம்தான் அந்த நிதி உள்ளது. அதை நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க கேட்டுள்ளோம். எங்களிடம் நிதி வழங்கப்பட்டதும், உணவு வீதி திட்டம் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆரோக்கிய உணவுவீதி திட்டத்தின் நோக்கம்:

சுகாதார உணவகங்கள் ஏற்படுத்தி, ஆரோக்கிய சுகாதார தரத்தில் உணவு வழங்குவது குறித்து, உணவகம் நடத்துவோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். துாய்மையான குடிநீர் பயன்பாடு, உணவு சாப்பிடும் முன் கை கழுவல், திட, திரவக் கழிவுகள் அகற்றல் மற்றும் சுகாதார உணவு முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். குறிப்பிட்ட பகுதியின் சிறப்பு உணவு வகைகளின் தரம், சுற்றுலா பொருளாதாரம், சுற்றுப்புற துாய்மை சூழல் ஆகியவற்றின் மேம்பாட்டிற்காக, இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.



உணவு வீதி திட்ட வசதிகள்
ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் நடமாடும் கடைகள் - 50 ஆழ்துளை கிணறு, குடிநீர் சுத்திகரிப்பு மையம் - தலா 1 கருங்கல் இருக்கைகள் - 25 சோலார் விளக்குகள் - 25 தகவல் பலகைகள் - 15 கடற்கரை பகுதி சிமெண்ட் கல் நடைபாதை - 200மீ., மிருக உருவ குப்பைத் தொட்டிகள் - 50 தற்காலிக நடமாடும் கழிப்பறைகள் - 10



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us