தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ தேக்கம்!

தேக்கம்!

தேக்கம்!


ADDED : செப் 25, 2026 08:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 08:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

* துாய்மை பணியாளர் பற்றாக்குறையால் குப்பை கழிவுகள்... * ‘கப்’ அடிக்கும் கூடுவாஞ்சேரி நகராட்சியில் சுகாதார சீர்கேடு * 240 ஊழியர்கள் பணி செய்வதாக ரூ.பல லட்சம் சுருட்டல்

கூடுவாஞ்சேரி, செப். 26–-

நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சியில், துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறையால், குப்பை அகற்றும் பணிகள் முடங்கி உள்ளன. இதனால், தெருக்களில் குப்பை கழிவுகள் தேக்கமடைந்து, நகராட்சி முழுதும், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. 240 ஊழியர்கள் பணி செய்வதுபோல் போலியாக கணக்கு காட்டி பல லட்சம் ரூபாய் சுருட்டுவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, 8.5 ச.கி.மீ., பரப்பில் அமைந்துள்ளது. இங்கு, 30 வார்டுகளில், 258 தெருக்களில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி அமைந்துள்ளதாலும், புறநகர் ரயில் நிலையம் இருப்பதாலும், புதிதாக குடியேறுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இங்கு துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறையால், தெருக்கள் தோறும் குப்பை கழிவுகள் தேக்கமடைந்துள்ளன. இதனால், நகராட்சியின் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

நந்திவரம், கூடுவாஞ்சேரி ஆகிய இரு ஊராட்சிகள் ஒன்றிணைக்கப்பட்டு, கடந்த 1984ல், நந்திவரம் -– கூடுவாஞ்சேரி என்ற பெயரில், பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, பின், 2021ல், நகராட்சியாக மாற்றப்பட்டது. இங்கு, ஒப்பந்த அடிப்படையில் 240 துாய்மை பணியாளர்கள் வேலை செய்வதாகக் கூறப்படுகிறது.

நகராட்சி நிர்வாக கணக்கின் படி, ஒரு வார்டுக்கு எட்டு ஊழியர்கள் பணி செய்ய வேண்டும். ஆனால், இருவர் கூட துாய்மை பணியில் ஈடுபடுவதில்லை. இதனால், குப்பை சேகரிக்கும் பணியில் கடும் தொய்வு ஏற்பட்டு, குடியிருப்புகளில் குப்பை கழிவுகள் தேங்கி, நகராட்சி முழுதும் சுகாதார சீர்கேட்டில் சிக்கித் தவிக்கிறது.

தற்போது, துாய்மை பணியில் 60 ஊழியர்கள் என்ற கணக்கில், ஒரு வார்டுக்கு இருவர் மட்டுமே துாய்மை பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், 240 ஊழியர்கள் பணி செய்வதுபோல் கணக்கு காட்டப்பட்டு, மாதந்தோறும் 10 லட்சம் ரூபாயை நகராட்சி ஊழியர்கள் கொள்ளை அடிக்கின்றனர். கடந்த ஆறு மாதங்களாக இந்த பிரச்னை நீடித்து வருகிறது.

தவிர, 3.5 கோடி ரூபாயில் கட்டப்பட்ட நகராட்சி புதிய அலுவலகம், கடந்த மார்ச் மாதம் திறக்கப்பட்டது. இதனால், ஜி.எஸ்.டி., சாலையில் ஏற்கனவே இயங்கி வந்த நகராட்சி அலுவலகம், குப்பை கொட்டும் இடமாக மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து வார்டு கவுன்சிலர்கள், நகராட்சி தலைவர், அதிகாரிகளிடம் முறையிட்டால், உரிய பதில் இல்லை. எனவே, துறைசார்ந்த உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

வார்டு உறுப்பினர்கள் கூறியதாவது:

ஆட்சி மாற்றத்தால் நகராட்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்களின் மனநிலை மாறிவிட்டது. மக்கள் பிரதிநிதிகளை அவர்கள் மதிப்பதே இல்லை.

துாய்மை பணியில் எத்தனை ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று கேட்டால், நகராட்சி நிர்வாகத்தினர், உரிய பதில் தருவதில்லை.

தவிர, ஒப்பந்த அடிப்படையில் தான் துாய்மை பணியாளர்கள் பணி புரிகின்றனர். இவர்களுக்கு ஒரு நாள் ஊதியம் 450 ரூபாய் வரை மட்டுமே வழங்கப்படுகிறது.

இதனால், இந்த பணிக்கு புதிதாக யாரும் வருவதில்லை. குறைந்தபட்ச ஊதியமாக அவர்களுக்கு மாதந்தோறும் 18 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்க வேண்டும்.

பழைய நகராட்சி அலுவலகத்தை தனியாருக்கு வாடகைக்கு விடுவதன் மூலம், நகராட்சியின் வருமானம் உயர வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நகராட்சி தலைவர் கூறியதாவது:

கூடுவாஞ்சேரி நகராட்சியில் பெயர் சொல்லும் அளவிற்கு பெரிய நிறுவனங்கள் ஏதும் இல்லாததால், வரி வருவாயும் மிக குறைவாகவே உள்ளது. இதனால், நகராட்சியில் கடுமையான நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

துாய்மை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஒப்பந்த வாகனங்களுக்கு, பல மாதம் வாடகை நிலுவையில் உள்ளன. இதுபோல், குடிநீர் வினியோக பணியை செய்த ஒப்பந்ததாரர்களுக்கும், நிலுவை தொகை நிறைய உள்ளது.

துாய்மை பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், ஒப்பந்த அடிப்படையில் பணி புரிவதால், தினமும் பலர் விடுப்பு எடுத்துக்கொள்கின்றனர்.

அவர்களுக்கான ஊதியத்தை அதிகரிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பழைய நகராட்சி அலுவலகம் இடிக்கப்பட்டு, அதில் அதி நவீன வசதிகளுடன் சமுதாய கூடம் கட்டுவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us