/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சென்னை புறநகரில் வெள்ள பாதிப்பு முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு
/
சென்னை புறநகரில் வெள்ள பாதிப்பு முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு
சென்னை புறநகரில் வெள்ள பாதிப்பு முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு
சென்னை புறநகரில் வெள்ள பாதிப்பு முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு
ADDED : பிப் 18, 2024 05:28 AM

சென்னை: சென்னை மற்றும் புறநகரில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை குறைக்கும் வகையில், வெள்ள கட்டுப்பாடு நடவடிக்கைகள், மழைநீர் கால்வாய்களை வடிவமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி திருப்புகழ் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.
சென்னை வெள்ள இடர் தணிப்பு மற்றும் மேலாண்மை கமிட்டியில், சுற்றுச்சூழல், நகர்ப்புற திட்டமிடல், பேரிடர் மேலாண்மை வல்லுனர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இக்கமிட்டி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ள பாதிப்பை நிரந்தரமாக தடுப்பதற்கான முழுமையான அறிக்கையை, முதல்வர் ஸ்டாலினிடம் ஏற்கனவே வழங்கியுள்ளது. அவற்றை, அரசு இதுவரை வெளியிடவில்லை.
இதற்கிடையே, 2023, டிசம்பரில் பெய்த கனமழையால், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னையில் சில பகுதிகள், மழை வெள்ளத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டன.
பல இடங்களில் இயல்புநிலை திரும்ப 10 நாட்கள் வரை ஆனது. தாம்பரம், ஆவடி போன்ற புறநகர் பகுதிகளிலும், வெள்ள பாதிப்பால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
அந்த மழை வெள்ள பாதிப்புக்கான காரணம் குறித்து, திருப்புகழ் கமிட்டி, ஐந்து இடங்களில் ஆய்வு செய்தது. அதன் 86 பக்கங்களுடைய அறிக்கையை, கமிட்டியின் தலைவர் திருப்புகழ், தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் நேற்று வழங்கினார்.
இதில், பாதிப்பு ஏற்பட்டதற்கான காரணம், அதை நிவர்த்தி செய்வதற்கான திட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
ஆய்வறிக்கை குறித்து, கமிட்டி உறுப்பினர்கள் கூறியதாவது:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், மழை வெள்ள பாதிப்புக்கு, பல்துறைகளுடனான ஒருங்கிணைப்பு இல்லாதது முக்கிய காரணம்.
அதேபோல், நீர்வளத்துறையின் கீழ் உள்ள, ஏரிகளுக்கு செல்லக்கூடிய போக்கு மற்றும் வரத்து கால்வாய்களில் ஆக்கிரமிக்கப்பட்டு குறுகிய நிலையில் உள்ளது.
மேலும், ஒன்றரை லட்சம் கன மீட்டர் நீர் செல்லக்கூடிய வகையில் இருந்த கால்வாய்கள் துார்வாரப்படாமல் இருந்ததால், 30,000 கன மீட்டர் தண்ணீர் செல்லும் வகையில் தான் உள்ளன.
சென்னை மாநகராட்சி மற்றும் இதர மாநகராட்சிகள், நாங்கள் பரிந்துரை செய்ததுபோல் துார்வாரும் பணியை முறையாக மேற்கொள்ளப்படவில்லை.
சில இடங்களில், மழைநீர் வடிகால் கட்டமைப்பும் முறையாக இல்லை. அத்துடன், பிளாஸ்டிக் குப்பையால், நீர்நிலைகள், வடிகால்களில் அடைப்புகள் ஏற்பட்டு, நீர் வடிந்து செல்ல முடியாமல், குடியிருப்புகளில் ஒரு வாரத்திற்கு மேல் தேங்கக்கூடிய நிலை ஏற்பட்டது.
இதுபோன்று பல்துறைகளின் குறைகளை சுட்டிக்காட்டியும், அதற்கான தீர்வு குறித்தும் அறிக்கையாக அளித்துள்ளோம். முழுமையான அறிக்கை குறித்த விபரங்களை, தமிழக அரசு வெளியிடும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.