ADDED : நவ 28, 2024 11:56 PM
கூடுவாஞ்சேரி
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ராஜிவ்காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில், அடிப்படை வசதிகள் கேட்டு, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
ராஜிவ்காந்தி நகர், பிரியா நகர் விரிவு மூன்று, ஆறு மற்றும் நான்காவது தெருக்களில், சாலைகள் அனைத்தும் சேதமடைந்து உள்ளன. தெரு விளக்குகள் நீண்ட நாட்களாக எரியவில்லை.
குடிநீர் குழாய் இணைப்புகளில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் காரணமாக, குடிநீர் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு, பல நாட்களாக குடிநீர் இன்றி தவித்து வருகிறோம்.
எனவே, எங்கள் பகுதிக்கு சாலை, தெரு விளக்கு, குடிநீர் மற்றும் குப்பையை உடனுக்குடன் அகற்றுதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை, உடனடியாக செய்து கொடுக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.