/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மேய்க்கால் புறம்போக்கு நிலம் தின்னலுாரில் அளவீட்டு பணி
/
மேய்க்கால் புறம்போக்கு நிலம் தின்னலுாரில் அளவீட்டு பணி
மேய்க்கால் புறம்போக்கு நிலம் தின்னலுாரில் அளவீட்டு பணி
மேய்க்கால் புறம்போக்கு நிலம் தின்னலுாரில் அளவீட்டு பணி
ADDED : நவ 10, 2024 01:22 AM

அச்சிறுபாக்கம்,:அச்சிறுபாக்கம் அடுத்த ஒரத்தி குறுவட்டத்திற்கு உட்பட்டு தின்னலுார் ஊராட்சி உள்ளது. இங்கு, ஊராட்சி பகுதியில் உள்ள மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது.
இதில், ஊராட்சி பகுதியில் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தடைபடுவதால், ஆக்கிரமிப்புகளை அகற்றி தரக்கோரி, கிராமவாசிகள் கலெக்டர், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர், மதுராந்தகம் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் தொடர்ந்து மனு அளித்து வந்தனர்.
கடந்த அக்., 2ம் தேதி நடந்த கிராம சபை கூட்டத்தில், வட்டார வளர்ச்சி அலுவலரை சிறை பிடித்து, மேயக்கால் புறம்போக்கு நிலங்களை மீட்டு தரும் வரை, கிராம சபை கூட்டம் நடத்த அனுமதிக்க மாட்டோம் எனக் கூறி, கூட்டத்தை புறக்கணித்தனர்.
இதையடுத்து கலெக்டர் உத்தரவின்படி, நேற்று தின்னலுார் ஊராட்சிக்குட்பட்ட மேய்க்கால் புறம்போக்கு புல எண்கள் 394/2, 393/1, 395 / 1.A.3, 396, 404, 406, 407, 401 , 338, 339 ஆகிய பகுதிகளில், வருவாய்த் துறையினர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையில், ஒரத்தி குறுவட்ட நில அளவர் வாயிலாக, நில அளவைப் பணி மேற்கொள்ளப்பட்டது.
மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள் அளவீடு செய்து, வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பாடாத வண்ணம், அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், ஒரத்தி காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேய்க்கால் புறம்போக்கு நிலம் அளவீடு செய்யப்பட்டு, ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்ட பகுதிகளில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், பணி செய்ய பயன்படுத்தி கொள்ளலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.