/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
லஞ்சம் பெற்று அலைக்கழித்த தாசில்தார் மாற்றம்
/
லஞ்சம் பெற்று அலைக்கழித்த தாசில்தார் மாற்றம்
ADDED : பிப் 22, 2025 11:52 PM
கும்மிடிப்பூண்டி, பிப். 23--
உட்பிரிவு பட்டா வழங்க, விவசாயியிடம் லஞ்சம் பெற்று அழைக்கழிப்பு செய்ததாக, எழுந்த புகாரின்படி, கும்மிடிப்பூண்டி தாசில்தார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டை அடுத்த, மேல்முதலம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி, 64. விவசாயி. இவர், வருவாய் துறை அலுவலர்கள் மீது அடுக்கடுக்காக புகார்கள் தெரிவிக்கும் வீடியோவும், தாசில்தார் உதவியாளரிடம் பணம் கொடுக்கும் வீடியோவில் சமூக வலைதளங்களில் பரவியது.
இது குறித்து விவசாயி ரவி கூறியதாவது:
மேல்முதலம்பேடு கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் தயாளன், சாமிநாதன் ஆகியோருக்கு சொந்தமான, 70 செண்ட் நிலத்தை அளந்து உட்பரிவு செய்து பட்டா வழங்க, கடந்த ஆண்டு ஜமாபந்தியில் மனு கொடுத்தோம்.
நடவடிக்கை இல்லாததால், தாசில்தார் சரவணகுமாரியை நேரில் சந்தித்து, அவர் தெரிவித்தபடி, தலைமை அளவர் விஜயிடம், 60,000 ரூபாய் கொடுத்தோம். மூன்று நாள் கழித்து, ஆன்லைனில், உட்பிரிவு பட்டா பதிவிறக்கம் செய்து கொள்ளும்படி தெரிவித்து அனுப்பினர்.
பல நாட்கள் கடந்தும், பட்டா வராத நிலையில், தலைமை அளவர் விஜய்யிடம் கொடுத்த பணம், தாசில்தாரை சென்றடையவில்லை என்பது தெரியவந்தது. வேறு இடத்திற்கு மாற்றலான விஜயை தொடர்பு கொண்டு, 50,000 ரூபாயை திரும்ப பெற்றோம்.
பின், தாசில்தார் உதவியாளர் காந்தி, என்பவரிடம், 40,000 ரூபாய் கொடுத்தோம். சாட்சிக்காக, பணம் கொடுப்பதை வீடியோ எடுத்துக் கொண்டோம். அந்த பணத்தில், 20,000 ரூபாய் மட்டுமே தாசில்தாருக்கு சென்றதால், மீண்டும் எங்களை தாசில்தார் அலைக்கழிப்பு செய்து வருகிறார்.
என்ன செய்வது என தெரியாமல், தமிழக முதல்வர் தனி பிரிவுக்கும், லஞ்ச ஒழிப்பு துறைக்கும் புகார் மனு அனுப்பினேன். அதன் மீதான விசாரணை தற்போது நடந்து வருகிறது.
இவ்வாறு விவசாயி ரவி கூறினார்.
இந்நிலையில், நேற்று முன்தினம், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தால், கும்மிடிப்பூண்டி தாசில்தார் சரவணகுமாரி, பணியிட மாற்றம் செய்யபட்டார்.
அவர், மாநெல்லுார் சிப்காட் திட்ட தனி தாசில்தாராக மாற்றப்பட்டார்.

