/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லை தேசிய நெடுஞ்சாலையில் டாஸ்மாக் கடையால் விபத்து அபாயம்
/
மாமல்லை தேசிய நெடுஞ்சாலையில் டாஸ்மாக் கடையால் விபத்து அபாயம்
மாமல்லை தேசிய நெடுஞ்சாலையில் டாஸ்மாக் கடையால் விபத்து அபாயம்
மாமல்லை தேசிய நெடுஞ்சாலையில் டாஸ்மாக் கடையால் விபத்து அபாயம்
ADDED : நவ 03, 2025 01:43 AM

மாமல்லபுரம்:மாமல்லபுரம் தேசிய நெடுஞ்சாலையில் செயல்படும் டாஸ்மாக் கடையால், விபத்து அபாயம் நிலவுகிறது.
மாமல்லபுரத்தில், புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை வழியே உள்ளூர், சுற்றுலா, தொலைதுார வாகனங்கள் கடக்கின்றன. வாகனங்கள் அதிக அளவில் செல்லும் நிலையில், இப்பகுதியில் டாஸ்மாக் கடை இடையூறாக இயங்கி வருகிறது.
முந்தைய கிழக்கு கடற்கரை சாலைக்கும், இந்த கடைக்கும் சற்று இடைவெளி இருந்தது.
தற்போது இப்பகுதி சாலை, மாமல்லபுரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டு, தொலைதுார வாகனங்கள் கடக்க மேம்பாலம் அமைக்கப்படுகிறது.
வாகனங்கள் சென்னை நோக்கிச் செல்ல, புதிதாக அணுகு சாலை அமைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சாலையை ஒட்டியே நெருக்கமாக டாஸ்மாக் கடை உள்ளது. டாஸ்மாக் கடைக்குச் செல்வோர், தங்களின் இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களை, கடைக்கு முன் சாலையில், விபத்து அபாயத்துடன் நிறுத்துகின்றனர்.
பின், அங்கேயே மது அருந்தி சாலையில் கூடுகின்றனர். மாலை முதல் இரவு வரை கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பிற வாகனங்கள் செல்வதில் சிக்கல் நீடிக்கிறது.
அரசு கட்டட, சிற்பக்கலைக் கல்லுாரி, சிற்பக்கூடங்கள், விடுதிகள், உணவகங்கள் ஆகியவை இப்பகுதியில் இயங்கும் நிலையில், 'குடி'மகன்களால் இடையூறு ஏற்படுகிறது.
நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், இக்கடை மாற்றப்படாமல் நீடிக்கிறது. எனவே, இந்த டாஸ்மாக் மதுக்கடையை, இடையூறு இல்லாத வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

