/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
முருகன் கோவில்களில் தைப்பூச விழா செங்கல்பட்டு மாவட்டத்தில் விமரிசை
/
முருகன் கோவில்களில் தைப்பூச விழா செங்கல்பட்டு மாவட்டத்தில் விமரிசை
முருகன் கோவில்களில் தைப்பூச விழா செங்கல்பட்டு மாவட்டத்தில் விமரிசை
முருகன் கோவில்களில் தைப்பூச விழா செங்கல்பட்டு மாவட்டத்தில் விமரிசை
ADDED : பிப் 12, 2025 01:22 AM

திருப்போரூர்:செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில், தைப்பூச விழா விமரிசையாக நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று அலகு குத்தியும், பல்வேறு வகை காவடி எடுத்தும் தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
தைப்பூசத்தையொட்டி திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், நேற்று அதிகாலை 3:30 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டது.
பக்தர்கள் சரவண பொய்கையில் நீராடி, கந்தனை வழிபட்டனர்.
மொட்டை அடித்தல், காது குத்தல், திருமணம், துலாபாரம் மேற்கொண்டும் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருப்போரூரில் குவிந்ததால், கோவில் வளாகம் மற்றும் ஓ.எம்.ஆர்., சாலை, மாட வீதிகளில் பக்தர்கள் கூட்டமும், கடுமையான போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டது.
கோவிலை சுற்றிவர கூட இடமில்லாமல், பக்தர்கள் கூட்ட நெரிசலால் சிலருக்கு மூச்சுத்திணறலும், மயக்கமும் ஏற்பட்டது.
நுாற்றுக்கணக்கான பக்தர்கள், வேம்படி விநாயகர் கோவிலிலிருந்து அலகு குத்தி, காவடி எடுத்து, பால் குடம் சுமந்து புறப்பட்டனர்.
ஓ.எம்.ஆர்., சாலை, செங்கல்பட்டு சாலை, இள்ளலுார் சாலையில் கிரிவலம் வந்து, கந்தனுக்கு அபிஷேகம் செய்தனர்.
கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.
* தெப்போற்சவம்:
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் நேற்று, தைப்பூச தெப்போற்சவமும் நடந்தது. இரவு 7:30 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வள்ளி, தெய்வானையுடன் கந்த சுவாமி, சரவணபொய்கையில் எழுந்தருளி, மூன்று முறை வலம் வந்தார்.
விழாவில் ஏராளமான பக்தர்கள் குளத்தில் கற்பூரம் ஏற்றி, கந்தனை வழிபட்டனர்.
* கடமலைப்புத்துார்
அச்சிறுபாக்கம் அருகே கடமலைப்புத்துாரில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச் சாலையில், சுத்த சன்மார்க்க சங்கத்தின் வள்ளலார் திருக்கோவில் உள்ளது.
நேற்று இக்கோவிலில், 11-ம் ஆண்டு தைப்பூச பெருவிழா, காலை 6:00 மணிக்கு மங்கல இசையுடன் துவங்கியது.
கொடியேற்றம், தைப்பூச வழிபாடு, ஆன்மிக சொற்பொழிவு, மஹா தீபாராதனையும் நடந்தது.
வடலுார் சுத்த சன்மார்க்க நிலைய வடலுார் தலைவர் சங்கர் வானவராயர் மற்றும் கடமலைப்புத்துார் சுத்த சன்மார்க்க தலைவர் சதாசிவம் தலைமையில் நடந்த விழாவில், பக்தர்கள் அனைவருக்கும், சன்மார்க்க சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
* பெருக்கரணை
சித்தாமூர் அருகே பெருக்கரணை கிராமத்தில், ஸ்ரீ மரகத தண்டாயுதபாணி திருக்கோவில் உள்ளது.
தைப்பூச பெருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை 8:00 மணியளவில், விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை மற்றும் கணபதி யாகம் நடந்தது.
காலை 9:30 மணியளவில், பால்குடம் புறப்பாடு நடந்தது. மலை அடிவாரத்தை சுற்றி பக்தர்கள் பால்குடம் சுமந்து வந்து, 10:30 மணியளவில் மரகத தண்டாயுதபாணிக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.
பின், 11:30 மணியளவில் விசேஷ அலங்காரம் செய்யப்பட்ட மரகத தண்டாயுதபாணிக்கு, மஹா தீபாராதனை காட்டப்பட்டது.
தைப்பூச பெருவிழாவில் பெருக்கரணை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும் தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தி, சுவாமியை வழிபட்டனர்.
* மறைமலைநகர்
மறைமலைநகர் நகராட்சி என்.ஹெச்.,- 2 பகுதியில், செல்வ முத்துக்குமார சுவாமி கோவிலில் நேற்று, தைப்பூசத்தை முன்னிட்டு காலை கணபதி ஹோமம், நித்திய பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன.
தொடர்ந்து, விரதமிருந்த பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகளில் வலம் வந்தனர்.
மூவலர் வள்ளி, தெய்வானை சமேத செல்வ முத்துக்குமார சுவாமி சந்தனக் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதே போல கருநிலம் கிராமத்தில் உள்ள கல்யாண முருகன் கோவில், சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையம் செல்லும் சாலையில் உள்ள சிங்கை சிங்கார வேலன் கோவில்களில், சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.
இதில், சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
- நமது நிருபர் குழு-
கூடுவாஞ்சேரி அடுத்த வல்லாஞ்சேரி, அமிர்தலிங்கேஸ்வரர் கோவிலில், 6ம் ஆண்டு தைப்பூச விழாவை முன்னிட்டு, பால் குடம் மற்றும் கந்தன் காவடி நிகழ்ச்சி நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.