/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அதிகாரிகளால் முடங்கிய தட்டான்மலை குடிநீர் திட்டம்... குற்றச்சாட்டு:ஆக்கிரமிப்புகள் குறி்த்தும் கவுன்சிலர்கள் ஆத்திரம்
/
அதிகாரிகளால் முடங்கிய தட்டான்மலை குடிநீர் திட்டம்... குற்றச்சாட்டு:ஆக்கிரமிப்புகள் குறி்த்தும் கவுன்சிலர்கள் ஆத்திரம்
அதிகாரிகளால் முடங்கிய தட்டான்மலை குடிநீர் திட்டம்... குற்றச்சாட்டு:ஆக்கிரமிப்புகள் குறி்த்தும் கவுன்சிலர்கள் ஆத்திரம்
அதிகாரிகளால் முடங்கிய தட்டான்மலை குடிநீர் திட்டம்... குற்றச்சாட்டு:ஆக்கிரமிப்புகள் குறி்த்தும் கவுன்சிலர்கள் ஆத்திரம்
ADDED : ஜூலை 23, 2025 01:32 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகராட்சியில், தட்டான்மலை குடிநீர் திட்டப் பணிகள் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும், நகர மக்களுக்கு குடிநீர் வழங்காமல் நகராட்சி நிர்வாகம் மெத்தனமாக உள்ளதாக, நகராட்சி கூட்டத்தில் வி.சி., கவுன்சிலர் குற்றம் சாட்டினார்.
செங்கல்பட்டு நகராட்சியின் சாதாரண கூட்டம், நகராட்சி தலைவர் தேன்மொழி தலைமையில், நேற்று நடந்தது. நகராட்சி கமிஷனர் ஆண்டவன் மற்றும் அதிகாரிகள், நகராட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், கவுன்சிலர்கள் பேசியதாவது:
அமுல்ராஜ், வி.சி., 9வது வார்டு: செங்கல்பட்டு நகராட்சி தட்டான் மலை குடிநீர் திட்டம், 1989ம் ஆண்டு, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் இருந்த போது கொண்டுவரப்பட்ட திட்டம். அதன் பின் 1996ம் ஆண்டு, திட்டம் துவக்கி நிறுத்தப்பட்டது.
தற்போது, தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, 4 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும், 1 லட்சம் கொள்ளளவில் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியும் கட்டப்பட்டன.
இப்பணிகள் முடிந்து, இரண்டு ஆண்டுகள் ஆகியும், நகரமக்களுக்கு குடிநீர் வழங்காமல், நகராட்சி நிர்வாகம் மெத்தனமாக உள்ளது. பொறியியல் துறையில் உள்ளவர்கள், பணிகளில் கவனம் செலுத்துவதில், மெத்தனப்போக்கை கடைபிடித்து வருகின்றனர்.
அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி உள்ள ஒருவருக்கு, 40,000 ரூபாய் வாங்கிக் கொண்டு வீட்டு வரி, குடிநீர் இணைப்பு வழங்கி உள்ளனர்.
இதேபோன்று, புறம்போக்கு நிலங்களில் உள்ளவர்களுக்கும் வழங்க வேண்டும்.
உதவி பொறியாளர்: தட்டான்மலை குடிநீர் திட்டம், 10 நாட்களுக்குள் செயல்பட்டிற்கு கொண்டுவரப்படும்.
தனசேகரன், தி.மு.க., 26வது வார்டு: எங்கள் வார்டு பகுதியில், 25 நாட்களாக குடிநீர் சரியாக வழங்குவதில்லை. குடிநீர் சீராக வழங்க, நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.
தேன்மொழி, நகராட்சி தலைவர்: பொறியியல் பிரிவைச் சேர்ந்தவர்கள், பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் பணியில் தனி கவனம் செலுத்த வேண்டும்.
தமிழ்செல்வன், சுயேச்சை 1வது வார்டு, பிரபுவேல், தி.மு.க., 8வது வார்டு, ராஜூ தி.மு.க., 23 வார்டு: செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில் ஒன்பது தனியார் பள்ளிகள், மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகம், மாவட்ட சிறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் இரண்டு சர்ச்சுகள் உள்ளன.
சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைக்கப்பட்டு உள்ளதால், காலை 8:00 மணியிலிருந்து 11:00 மணி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இவ்வழியாக மக்கள் சென்றுவர முடியாமல் சிரமப்படுகின்றனர். இதனால், சாலையை ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை அகற்ற வேண்டும்.
இதே சாலையில் உள்ள உணவக கடைகளில் விற்கப்படும் தரமற்ற உணவுகளை, பள்ளி மாணவர்கள் வாங்கி சாப்பிடுகின்றனர்.
இதனால், மாணவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது. உணவு பாதுகாப்பு அதிகாரிகள், சாலையோர உணவு கடைகளை ஆய்வு செய்வதில்லை.
ஆண்டவன், நகராட்சி கமிஷனர்: நெடுஞ்சாலைத் துறை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
இதையடுத்து, 'சாலையோர உணவு கடைகளில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' என, சுகாதார ஆய்வாளர் தெரிவித்தார்.
இவ்வாறு, கூட்டத்தில் விவாதம் நடந்தது.
சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைக்கப்பட்டு உள்ளதால், காலை 8:00 மணியிலிருந்து 11:00 மணி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது