/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மத்திய அரசு தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு விவசாயிகளுக்கு ரூ.54.74 கோடி பாக்கி
/
மத்திய அரசு தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு விவசாயிகளுக்கு ரூ.54.74 கோடி பாக்கி
மத்திய அரசு தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு விவசாயிகளுக்கு ரூ.54.74 கோடி பாக்கி
மத்திய அரசு தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு விவசாயிகளுக்கு ரூ.54.74 கோடி பாக்கி
ADDED : ஜூன் 24, 2025 07:25 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், மத்திய அரசு தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு கொள்முதல் நிலையங்களில், நெல் கொள்முதல் செய்த வகையில், 2,226 விவசாயிகளுக்கு, 54.76 கோடி ரூபாய் நிலுவை தொகையை வழங்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் மத்திய அரசின் தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில், 140 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன.
இதில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் நடத்திய நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் விற்பனை செய்த நெல்லுக்கான தொகை, அவரவர் வங்கி கணக்கில் உடனுக்குடன் செலுத்தப்பட்டது.
மத்திய அரசின் தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு நடத்திய 40 கொள்முதல் நிலையங்களில், 7,761 விவசாயிகள், 90 ஆயிரத்து 428 டன் நெல் விற்பனை செய்தனர்.
இதில் முதற்கட்டமாக, 5,535 விவசாயிகள் விற்பனை செய்த நெல்லுக்கான 166.55 கோடி ரூபாய், விவசாயிகள் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது.
2,226 விவசாயிகளுக்கு, 54.74 கோடி ரூபாய் நிலுவை வைக்கப்பட்டு உள்ளது.
இதனால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நிலுவை தொகையை வழங்க கோரி, விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டங்களில், தொடர்ந்து விவசாயிகள் மனு அளித்து வருகின்றனர்.
இம்மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு நிர்வாகத்திற்கு, மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்தது.
இதன் மீதும் நடவடிக்கை எடுக்காமல், கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் நலன் கருதி, 54.74 கோடி ரூபாய் நிலுவை தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கூறியதாவது:
மத்திய அரசின் தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு நடத்திய நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடம் வங்கிய நெல்லை மூட்டைகளாக அடிக்கி வைத்துவிட்டு, கடந்த மே மாதம் சென்றனர்.
அதன் பின், அவர்களால் கொள்முதல் நிலையத்தை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. பின், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், விவசாயிகள் 1,707 பேரிடம், 15,255 டன் நெல்லை கொள்முதல் செய்து, 37.28 கோடி ரூபாயை, அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தி உள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மத்திய அரசின் தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு நடத்திய நெல் கொள்முதல் நிலையத்தில், நெல் விற்பனை செய்த விவசாயிகளுக்கு, வங்கியில் பணம் செலுத்தப்படவில்லை. விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறோம். நிலுவை தொகையை வழங்க, கலெக்டர் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சி.ரவி
பெருந்தண்டலம், செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,226 விவசாயிகளுக்கு, 54.74 கோடி ரூபாய் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்த தொகை, வரும் 15 நாட்களில், விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும்.
- தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு அதிகாரிகள்,
செங்கல்பட்டு.