/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தாம்பரம் பெரிய ஏரி - அடையாறு இணைக்கும் மூடுகால்வாய் திட்டம் 4 ஆண்டுகளாக இழுபறி
/
தாம்பரம் பெரிய ஏரி - அடையாறு இணைக்கும் மூடுகால்வாய் திட்டம் 4 ஆண்டுகளாக இழுபறி
தாம்பரம் பெரிய ஏரி - அடையாறு இணைக்கும் மூடுகால்வாய் திட்டம் 4 ஆண்டுகளாக இழுபறி
தாம்பரம் பெரிய ஏரி - அடையாறு இணைக்கும் மூடுகால்வாய் திட்டம் 4 ஆண்டுகளாக இழுபறி
ADDED : அக் 06, 2025 01:43 AM

தாம்பரம்:தாம்பரம் பெரிய ஏரியில் இருந்து அடையாறு ஆற்றை இணைக்கும் மூடுகால்வாய் திட்டம், இடையில் 200 அடி நீளத்திற்கு கால்வாய் கட்டப்படாததால், நான்கு ஆண்டுகளாக முழுமை பெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
மேற்கு தாம்பரத்தில், நீர்வளத்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது. பல ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி, சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளால் சுருங்கிவிட்டது.
இந்த ஏரியை சுற்றி, படேல் நகர், திருவள்ளுவர்புரம், சத்யசாய் நகர், குறிஞ்சி நகர் ஏரிக்கரை தெரு, கிருஷ்ணா நகர், மல்லிகா நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.
குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், பல ஆண்டுகளாக ஏரியில் கலப்பதால், நீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது. அதேபோல், ஆகாயத்தாமரை வளர்ந்து மூடிவிட்டது.
ஒவ்வொரு ஆண்டும், மழையின் போது ஏரி நிரம்பி, உபரி நீர் வெளியேறி, குடியிருப்புகளை சூழும்.
வெள்ள பாதிப்பை தடுப்பதற்காக, இவ்வேரியில் இருந்து மூடுகால்வாய் கட்டி, முடிச்சூர் சாலை சந்திப்பு வழியாக அடையாறு ஆற்றில் இணைக்க திட்டமிடப்பட்டது.
அதன்படி, கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது, 13.85 கோடி ரூபாய் செலவில், பெரிய ஏரியில் இருந்து குறிஞ்சி நகர் ஏரிக்கரை தெரு, வி.ஜி.என்., குடியிருப்பு வழியாக, 15 அடி அகலம், 13 அடி ஆழம் கொண்ட மூடுகால்வாய் கட்டும் பணி துவங்கியது.
ஏரியில் இருந்து வி.ஜி.என்., குடியிருப்பை கடந்து, புறவழிச்சாலை ஓரத்தில் கொண்டு போய் கால்வாய் நிறுத்தப்பட்டுள்ளது. இடையில் 200 அடி நீளத்திற்கு மட்டும் கால்வாய் கட்டப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், 200 அடி நீளத்தை கடந்து, அங்கிருந்து முடிச்சூர் சாலை சந்திப்பு வரை கால்வாய் கட்டப்பட்டுள்ளது.
இடையில், 200 அடி நீளத்திற்கு கால்வாய் கட்டப்படாததால், அத்திட்டம் நான்கு ஆண்டுகள் ஆகியும் முழுமை பெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனால், வரும் மழைகாலத்தில் வழக்கம் போல் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படும்.
அதனால், இவ்விஷயத்தில் செங்கல்பட்டு கலெக்டர் நேரில் ஆய்வு செய்து, கிடப்பில் போடப்பட்டுள்ள, 200 அடி நீளத்திற்கு கால்வாய் கட்டி, மூடுகால்வாய் திட்டத்தை முழுமையாக முடித்து, வெள்ள பாதிப்பை தடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.