/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இணைப்பு கொடுத்த மறுநாளே குழாய் உடைந்து பாலாறு குடிநீர் வீண்
/
இணைப்பு கொடுத்த மறுநாளே குழாய் உடைந்து பாலாறு குடிநீர் வீண்
இணைப்பு கொடுத்த மறுநாளே குழாய் உடைந்து பாலாறு குடிநீர் வீண்
இணைப்பு கொடுத்த மறுநாளே குழாய் உடைந்து பாலாறு குடிநீர் வீண்
ADDED : நவ 10, 2025 11:15 PM

முடிச்சூர்: தாம்பரம் - முடிச்சூர் சாலையில், பாலாறு குழாயுடனான இணைப்பை முறையாக கொடுக்காததால், கசிவு ஏற்பட்டு, பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாக வெளியேறி குடியிருப்புகளில் பாய்ந்ததால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.
தாம்பரம் மாநகராட்சி, 4வது மண்டலத்தில் உள்ள பெருங்களத்துார் - பீர்க்கன்காரணையில், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
அவை பேரூராட்சியாக இருந்த போது, முடிச்சூர் சாலை வழியாக செல்லும் பாலாறு குழாயில் இருந்து இணைப்பு கொடுத்து, பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். பின், திடீரென பாலாறு குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. தற்போது, உள்ளூர் ஆதாரம் வாயிலாக தண்ணீர் வினியோகிக்கப் படுகிறது.
தாம்பரம் மாநகராட்சியுடன் பெருங்களத்துார் - பீர்க்கன்காரணை பகுதிகள் இணைக்கப்பட்டதால், மெட்ரோ அல்லது பாலாறு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, தாம்பரம் - முடிச்சூர் சாலை வழியாக பாலாறு குழாய் செல்வதால், அதிலிருந்து இணைப்பு எடுத்து, தொட்டிகளில் நிரப்பி, இப்பகுதிகளுக்கு வினியோகிக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்கான பணிகள் முடிக்கப்பட்டு, பத்மாவதி திருமண மண்டபம் அருகே தாம்பரம் - முடிச்சூர் சாலை வழியாக செல்லும் பிரதான குழாயில் இருந்து, பெருங்களத்துார் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு இணைப்பு வழங்கப்பட்டது.
அடுத்த கட்டமாக, பார்வதி நகர் சந்திப்பில், பாலாறு குழாயில் இருந்து, அருகேயுள்ள தொட்டிக்கு, நவ., 8ம் தேதி இரவு, பள்ளம் தோண்டி இணைப்பு கொடுக்கப்பட்டது.
மறுநாள், பணி நடந்த இடத்தில் கசிவு ஏற்பட்டு, பாலாறு குடிநீர் வெளியேற துவங்கியது. ஒரு கட்டத்தில், தண்ணீர் குபுகுபு என வெளியேறி பெருக்கெடுத்து ஓடி, ராஜேந்திர பிரசாத், ராஜாஜி தெருக்களில் பாய்ந்தது.
தாழ்வான குடியிருப்புகளில் குடிநீர் புகுந்ததால், பொதுமக்கள் மழைக்காலம் போன்ற பாதிப்பை சந்தித்தனர். இந்த பாதிப்பு, காலை முதல் மாலை வரை நீடித்தது.
அதன்பின், மாநகராட்சி அதிகாரிகள், மீண்டும் பள்ளம் தோண்டி கசிவை சரிசெய்தனர். மாநகராட்சி அதிகாரிகளின் இந்த அலட்சியத்தால், தாம்பரம் - முடிச்சூர் சாலையில், பல லட்சம் லிட்டர் பாலாறு குடிநீர் வீணானது.

