/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பெரிய ஏரியில் 1 கோடி பனை விதை நடும் பணியை துவக்கிய அமைச்சர்
/
பெரிய ஏரியில் 1 கோடி பனை விதை நடும் பணியை துவக்கிய அமைச்சர்
பெரிய ஏரியில் 1 கோடி பனை விதை நடும் பணியை துவக்கிய அமைச்சர்
பெரிய ஏரியில் 1 கோடி பனை விதை நடும் பணியை துவக்கிய அமைச்சர்
ADDED : நவ 10, 2024 01:42 AM

திருப்போரூர்:அருங்குன்றம் பெரிய ஏரியில், ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியை, தமிழக அமைச்சர் அன்பரசன் நேற்று துவக்கி வைத்தார்.
தமிழக பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றாக பனைமரம் விளங்கி வருகிறது. தமிழகத்தின் மாநில மரம் என்ற சிறப்பு அந்தஸ்தை பெற்று விளங்குகிறது.
இந்தியாவிலேயே, தமிழகத்தில் தான் பனை மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இதிலிருந்து, 500க்கும் மேற்பட்ட பொருட்கள் நமக்கு பயனளிக்கும் வகையில் கிடைக்கிறது. நன்கு வளர்ந்த ஒரு பனை மரம், 100 ஆண்டுகள் வரை பயனளிக்கும்.
இந்த பனை மரத்தில், 30-க்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. தற்காலத்தில் அதன் வகைகள் குறைந்துவிட்டது. இதனால், பனைமரம் நடுவது மிகவும் அவசியமாக கருதப்படுகிறது. எனவே, இதை அதிகரிக்க தமிழக முதல்வர் மாநிலம் முழுதும் ஒரு கோடி பனைவிதை நடும் பணியை துவக்கி வைத்தார்.
அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தாலுகா, அருங்குன்றம் பெரிய ஏரி கரையில், ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியின் துவக்க விழா நேற்று நடந்தது.
இதில், கலெக்டர் அருண்ராஜ் தலைமை வகித்தார். எம்.பி., செல்வம், திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், பனை விதைகள் நடும் பணியை துவக்கி வைத்தார். இதில், பள்ளி, கல்லூரி மாணவர்கள், மகளிர் குழுக்கள், தன்னார்வலர்கள் பங்கேற்று, 5,000 பனை விதைகளை நடவு செய்தனர்.
தொடர்ந்து, அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற 'வருமுன் காப்போம்' திட்ட மருத்துவ முகாமை அமைச்சர் துவக்கி வைத்து, 10 கர்ப்பிணியருக்கு ஊட்டச்சத்து பெட்டகமும், 10 பயனாளிகளுக்கு மருந்து மாத்திரை பெட்டகமும் வழங்கினார்.
இதில், மாவட்ட வன அலுவலர் ரவி மீனா, கூடுதல் கலெக்டர் அனாமிகா, திருப்போரூர் ஒன்றிய குழு துணை தலைவர் சத்யா, வேளாண் ஆத்ம குழு தலைவர் சேகர், அருங்குன்றம் ஊராட்சி தலைவர் அன்பரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.