/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெடுஞ்சாலை துறையின் அலட்சியத்தால் பொழிச்சலுாரில் தொடரும் கழிவுநீர் பிரச்னை இரு ஊராட்சி மக்களிடையே 'லடாய்'
/
நெடுஞ்சாலை துறையின் அலட்சியத்தால் பொழிச்சலுாரில் தொடரும் கழிவுநீர் பிரச்னை இரு ஊராட்சி மக்களிடையே 'லடாய்'
நெடுஞ்சாலை துறையின் அலட்சியத்தால் பொழிச்சலுாரில் தொடரும் கழிவுநீர் பிரச்னை இரு ஊராட்சி மக்களிடையே 'லடாய்'
நெடுஞ்சாலை துறையின் அலட்சியத்தால் பொழிச்சலுாரில் தொடரும் கழிவுநீர் பிரச்னை இரு ஊராட்சி மக்களிடையே 'லடாய்'
ADDED : பிப் 03, 2025 03:55 AM
பம்மல்:
பல்லாவரம் அருகே பம்மல் ஸ்டேட் பாங்க் காலனி, அதை சுற்றியுள்ள பகுதிகளில், மழைக் காலத்தில் வெளியேறும் மழைநீர், ஆண்டாள் - மூவர் நகர், கவுல்பஜார் ஊராட்சி குடியிருப்பு வழியாக வெளியேறி, அடையாறு ஆற்றில் கலக்கும்.
மழை அதிகமாக பெய்தால், இப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும். இதை தடுக்க, பம்மல் ஸ்டேட் பாங்க் காலனியில் இருந்து ஆண்டாள் - மூவர் நகர் வழியாக, அடையாறு ஆறு வரை மூடுகால்வாய் கட்ட திட்டமிடப்பட்டது. ஆனால், இறுதிவரை முடிக்காமல், பாதியோடு நிற்கிறது.
நெடுஞ்சாலைத் துறையினர் கால்வாயை முறையாக திட்டமிடாமல் கட்டியதால், அதன் வழியாக வெளியேறும் கழிவுநீர், பொழிச்சலுார் ஊராட்சி, ராமலிங்கம் நகர், ராமானுஜர் தெரு மற்றும் கவுல்பஜார் ஊராட்சி அப்துல் கலாம் நகர் பகுதிகளில், காலி மனைகளில் குளம்போல் தேங்கியுள்ளது.
இதில், இருவூராட்சி மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். கோபமடைந்த பொதுமக்கள், காலிமனை உரிமையாளர் சேர்ந்து, கவுல்பஜார் ஊராட்சி எல்லையில், சிறுபாலம் வழியாக காலிமனைக்கு கழிவுநீர் செல்லும் பாதையை, சில நாட்களுக்கு முன் மண்ணை கொட்டி மூடினர்.
இதனால், கழிவுநீர் பின்நோக்கி சென்று, பொழிச்சலுார் ஊராட்சி, ஆண்டாள் நகர் வீடுகளில் தேங்குகிறது.
இந்நிலையில், பொழிச்சலுார் ஊராட்சி தலைவர் வனஜா, வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர், கவுல்பஜார் ஊராட்சி எல்லையில் மண்ணை கொட்டி மூடப்பட்ட சிறுபாலம் உள்ள இடத்திற்கு, சில நாட்களுக்கு முன் சென்று, மண்ணை அகற்ற முயன்றனர்.
இதையறிந்த, கவுல்பஜார் ஊராட்சி முன்னாள் தலைவர், தற்போதைய துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் காலி மனை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கிடையில், அங்கு வந்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம், இரு ஊராட்சி மக்களும் திட்டமிடாமல் கால்வாய் கட்டியதே, காலிமனைகளிலும், வீடுகளிலும் கழிவுநீர் தேங்குவதற்கு காரணம் என, குற்றஞ்சாட்டினர்.
மக்களின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமலும், பிரச்னைக்கு தீர்வு காண முடியாமலும் தவித்த நெடுஞ்சாலைத் துறையினர், அங்கிருந்து சென்றனர்.
பொழிச்சலுார் ஊராட்சி பல்லாவரம் தொகுதியிலும், கவுல்பஜார் ஊராட்சி ஆலந்துார் தொகுதியிலும் அடங்கியது.
ஆலந்துார் தொகுதி எம்.எல்.ஏ.,வான அமைச்சர் அன்பரசன் தொகுதியில், இவ்வளவு பிரச்னை நீடித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

