/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் 'பார்க்கிங்' ஒப்பந்ததாரர் அடாவடி
/
கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் 'பார்க்கிங்' ஒப்பந்ததாரர் அடாவடி
கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் 'பார்க்கிங்' ஒப்பந்ததாரர் அடாவடி
கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் 'பார்க்கிங்' ஒப்பந்ததாரர் அடாவடி
ADDED : பிப் 03, 2025 11:56 PM

கூடுவாஞ்சேரி, நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சியில், கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகன நிறுத்தம் செயல்படுகிறது.
இதை, அப்பகுதியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர் ஒப்பந்தம் பெற்று, இருசக்கர வாகனங்களுக்கு கட்டணம் வசூலித்து வருகிறார்.
இந்நிலையில், இங்கு வாகனங்கள் அதிக அளவில் வருவதை தொடர்ந்து, ஒப்பந்தம் பெறப்பட்டுள்ள எல்லை மட்டுமின்றி, பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிற்கும் இடம், பயணியர் நடந்து செல்லும் இடங்களையும் ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்தி, அதற்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்களால், பேருந்து நிலையத்தில் பேருந்து ஓட்டுநர்களுக்கும், பயணியருக்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
கூடுவாஞ்சேரி நகராட்சி பேருந்து நிலையத்தில் இருந்து, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் அதிகம் உள்ளன.
பள்ளிக்கு வரும் மாணவர்கள், அரசு பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு வரும் மாணவர்கள், கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தில் இறங்கி, பின்புறம் உள்ள வாசல் வழியாக, நந்திவரம் - நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த வழியை தினமும், பள்ளி மாணவர்கள் 5,000க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த பொது வழிப்பாதையை ஆக்கிரமித்து, இருசக்கர வாகன ஒப்பந்ததாரர் வாகனங்களை நிறுத்தி கட்டணம் வசூலிக்கிறார். எனவே, அத்துமீறி செயல்படும் ஒப்பந்ததாரர் மீது நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, பேருந்து நிலையத்தின் பின்பகுதியை பொதுமக்கள், மாணவர்கள் தங்கு தடையின்றி கடந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.