/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செப்பனிடப்பட்ட சாலை சிறுமழைக்கு சிதறியது
/
செப்பனிடப்பட்ட சாலை சிறுமழைக்கு சிதறியது
ADDED : ஏப் 04, 2025 02:13 AM

காயரம்பேடு:கூடுவாஞ்சேரி -- நெல்லிக்குப்பம் வழித்தடத்தில், காயரம்பேடு சந்திப்பில், ஏற்கனவே செப்பனிடப்பட்ட சாலை, நேற்று பெய்த சிறு மழையில் மீண்டும் சேதமாகி, குண்டும் குழியுமாக மாறியது.
கூடுவாஞ்சேரி -- நெல்லிக்குப்பம் இடையே, 11 கி.மீ., துாரமுள்ள சாலை உள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த வழித்தடத்தில் பயணிக்கின்றன.
இந்த சாலையில், காயரம்பேடு சந்திப்பில், பள்ளங்கள் உருவானதால், சில மாதங்களுக்கு முன், தார் கலவை வாயிலாக பள்ளங்கள் சரிசெய்யப்பட்டன.
இந்நிலையில், நேற்று காலை, கூடுவாஞ்சேரி சுற்றுப்பகுதியில் இரண்டு மணி நேரம் சாரல் மழை துாவியது. இந்த சிறு மழையில், காயரம்பேடு சந்திப்பில் ஏற்கனவே செப்பனிடப்பட்ட சாலையில் நீர் தேங்கி, மீண்டும் பள்ளங்கள் உருவாகின.
தொடர் வாகனப் போக்குவரத்தால், இந்த பள்ளங்கள் பெரிதாகி, வாகனப் போக்குவரத்திற்கு இடையூறாக மாறும்.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள், சாலையை செப்பனிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.