/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இரு மாவட்ட எல்லையில் உள்ள சாலை 10 ஆண்டாக சீரமைக்கப்படாத அவலம்
/
இரு மாவட்ட எல்லையில் உள்ள சாலை 10 ஆண்டாக சீரமைக்கப்படாத அவலம்
இரு மாவட்ட எல்லையில் உள்ள சாலை 10 ஆண்டாக சீரமைக்கப்படாத அவலம்
இரு மாவட்ட எல்லையில் உள்ள சாலை 10 ஆண்டாக சீரமைக்கப்படாத அவலம்
ADDED : அக் 04, 2024 01:26 AM

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த ஆப்பூர் - வளையகரணை இடையே, 2 கி.மீ., சாலை உள்ளது.
வளையகரணை கிராம மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளான மருத்துவம், கல்வி, வங்கி உள்ளிட்ட தேவைகளுக்கு, இந்த சாலை வழியாக செங்கல்பட்டு, சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
ஒரகடம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு செல்வோரும் இந்த சாலை வழியாக சென்று வருகின்றனர்.
இந்த சாலை, கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிதிலமடைந்து, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இருபுறமும் வனப்பகுதிகள் உள்ளதால், சாலையை மரங்கள் மற்றும் செடிகள் ஆக்கிரமித்து உள்ளன.
இது குறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:
இந்த சாலை, பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால், கிராம மக்கள் இந்த சாலையை பயன்படுத்துவதை தவிர்த்து, 2 கி.மீ., சுற்றிச் சென்று வருகின்றனர்.
வளையகரணை கிராமம், காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஒன்றியத்தில் உள்ளது. ஆனால், சாலை உள்ள இந்த பகுதி, செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தின் எல்லையில் உள்ளது.
இதனால் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். மேலும், சாலை அமைக்க வனத்துறையிடம் அனுமதி பெறுவதில், பெரும் சிக்கல் உள்ளது. சாலை வசதி இல்லாததால், அவசர காலங்களில் மருத்துவமனை செல்வது கூட சவாலாக உள்ளது.
எனவே, இந்த சாலையை சீரமைக்க, உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

