sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கை மாவட்டத்தில் பூங்காக்கள் நிலைமை...பரிதாபம்: பொழுதுபோக்க இடமில்லாமல் மக்கள் தவிப்பு

/

செங்கை மாவட்டத்தில் பூங்காக்கள் நிலைமை...பரிதாபம்: பொழுதுபோக்க இடமில்லாமல் மக்கள் தவிப்பு

செங்கை மாவட்டத்தில் பூங்காக்கள் நிலைமை...பரிதாபம்: பொழுதுபோக்க இடமில்லாமல் மக்கள் தவிப்பு

செங்கை மாவட்டத்தில் பூங்காக்கள் நிலைமை...பரிதாபம்: பொழுதுபோக்க இடமில்லாமல் மக்கள் தவிப்பு


ADDED : ஆக 20, 2025 02:17 AM

Google News

ADDED : ஆக 20, 2025 02:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள பூங்காக்கள் முறையாக பராமரிக்கப்படாததால், 80 சதவீத பூங்காக்கள் பரிதாப நிலையில் உள்ளன. இதனால் பொழுபோக்கு இடம் இல்லாமல், மக்கள் தவித்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து 2019ல் பிரித்து 2945 ச.கி.மீ., பரப்பில் செங்கல்பட்டு மாவட்டம் உருவாக்கப்பட்டது.

மாவட்டத்தில், ஒரு மாநகராட்சி, நான்கு நகராட்சிகள், ஆறு பேரூராட்சிகள், 359 ஊராட்சிகள் உள்ளன. 30 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் வசிக்கின்றனர்.

செங்கை மாவட்டத்தின் 50 சதவீத பகுதிகள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், பெரு வணிக நிறுவனங்கள், தனியார் குடியிருப்புகள் என, சென்னையின் அடையாளங்களை சுமந்து நிற்கின்றன. மீதமுள்ள பகுதிகள் வேளாண் தொழிலை மையப்படுத்தி உள்ளன.

நகர மயமாக்கல் காரணமாக, தனியார் குடியிருப்புகளும், புதிதாக வீடு கட்டி குடியேறுவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரிக்க, செங்கை மாவட்ட மக்கள் தொகையும் வேகமாக உயர்ந்து வருகிறது.

ஆனால், அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, அடிப்படைக் கட்டமைப்புகள் இன்னமும் போதுமான அளவில் உருவாக்கப்படவில்லை என்பது பகுதிவாசிகளின் புலம்பல்களாக உள்ளது.

குறிப்பாக, மக்கள் பொழுது போக்க பூங்காக்கள் போதிய எண்ணிக்கையில் இல்லை. செயல்பாட்டில் உள்ள பூங்காக்களும் முறையாக பராமரிக்கப்படவில்லை என்பது பலதரப்பு குற்றச்சாட்டாக உள்ளது.

பெரும்பாலான ஊராட்சிகளில், பூங்காங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஓ.எஸ்.ஆர்., நிலங்கள், தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளன.

புதிதாக உருவாக்கப்பட்ட பூங்காக்கள், முறையான பராமரிப்பின்றி, விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள் உடைந்து, மக்கள் பயன்படுத்த முடியாதபடி உள்ளன.

எனவே, சேதமடைந்துள்ள பூங்கா கட்டுமானங்கள், விளையாட்டு உபகரணங்கள் ஆகியவற்றை சீரமைக்கவும், புதிய பூங்காக்கள் உருவாக்கம், பராமரிப்பு ஆகியவற்றுக்கு உரிய அதிகாரிகள், ஊழியர்களை நியமிக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊரப்பாக்கம் ஊரப்பாக்கம் பகுதி மக்கள் கூறியதாவது:

ஊரப்பாக்கம் ஊராட்சி, கிளாம்பாக்கம் பேருந்து முனையம், ஜி.எஸ்.டி., சாலையோரம், 6 ஏக்கர் பரப்பில் 14 கோடி ரூபாய் செலவில், நீரூற்று பூங்கா, 16 ஏக்கர் பரப்பில், 15.2 கோடி ரூபாய் செலவில் காலநிலைப் பூங்கா என, இரு பூங்காக்கள் உருவாக்கப்பட்டு, கடந்த 2023 மற்றும் 2024ல் திறக்கப்பட்டன.

இதில், காலநிலைப் பூங்காவில், சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட விளையாட்டு திடலில் உள்ள தொங்கு ஊஞ்சல், இரும்பு ராட்டினம் உள்ளிட்ட உபகரணங்கள் கடந்த ஒரு மாதமாக பழுதடைந்து, உடைந்து சேதமான நிலையில் உள்ளன.

தவிர, சிறுவர்கள் விளையாடி மகிழும்போது, பெற்றோர்கள் அமர்ந்து பார்க்கும்படி அமைக்கப்பட்டுள்ள சறுக்கு மெத்தை 'கேலரி' பல இடங்களில் பெயர்ந்து, குண்டும் குழியுமாக உள்ளது.

நீரூற்று பூங்காவில் குழந்தைகளை மகிழ்விக்க உருவாக்கப்பட்ட நீரூற்றுகள் எதுவும் தற்போது செயல்பாட்டில் இல்லை.

வண்டலுார் வண்டலுார் பகுதி மக்கள் கூறியதாவது:

வண்டலுாரில் 15 வார்டுகளில் 40, 000க்கும் மேற்பட்ட நபர்கள் வசிக்கின்றனர். ஆனால், மக்கள் பொழுதுபோக்க ஒரு பூங்காவும் இல்லை.

வால்மீகி தெருவில் 22 சென்ட் பரப்பில் இருந்த ஒரு பூங்கா, நான்கு ஆண்டாக பராமரிப்பின்றி, வனாந்தர பகுதியாக மாறி விட்டது.

மறைமலை நகர் நகராட்சி 16 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி 21 வார்டு பகுதிகளை கொண்டு உள்ளது.

சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளுக்கு தினமும் மறைமலை நகர் வந்து செல்கின்றனர்.

மறைமலைநகர் 21 வார்டுகளில் 371 இடங்கள் பூங்கிவிற்காக ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் நகராட்சி சார்பில் 117 பூங்காக்களாக உருவாக்கப்பட்டு உள்ளன.

சிமெண்ட் கற்கள் கொண்ட நடைபாதைகள், குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த பூங்காக்கள் முறையான பராமரிப்பு இல்லாமல் வீணாகி வருகின்றன.

இந்த பூங்காக்களில் மின் விளக்குகள், விளையாட்டு உபகரணங்கள், சுற்று சுவர்கள் சேதமடைந்து காணப்படுகிறன.

திருக்கச்சூர், காட்டாங்கொளத்துார், பேரமனூர் கிழக்கு பொத்தேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பூங்காக்கள் பாழடைந்து காணப்படுகின்றன.

மது அருந்துவோரின் கூடாரமாக மாறி உள்ளது. ஸ்ரீவாரி நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நவீன பூங்கா மழை காலங்களில் தண்ணீர் தேங்கி மக்கள் உள்ளே செல்ல முடியாத நிலையில் உள்ளது.

திருப்போரூர் திருப்போரூர் பேரூராட்சி, திருவஞ்சாவடி தெரு, 7வது வார்டில், சில ஆண்டுகளுக்கு முன் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. இந்த சிறுவர் பூங்காவில், 5 வயது முதல், 15 வயது வரையிலான சிறுவர்கள் விளையாடுவதற்காக, பல்வேறு வகையான விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டன. மேலும் பூங்காவில், சுற்றுச்சுவருடன் தடுப்புக் கம்பிகள் மற்றும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், இந்த பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள், தற்போது உடைந்துள்ளன. மின் விளக்குகளும் சேதமடைந்து உள்ளன.

விடுமுறை மற்றும் மாலை நேரங்களில், சிறுவர்கள் அதிகமாக இந்த பூங்காவிற்கு வருகின்றனர்.

விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து உள்ளதால், அவற்றை பயன்படுத்த முடியாமல் ஏமாற்றமடைகின்றனர்.

மின் விளக்குகளும் சேதமடைந்து எரியாமல் உள்ளதால், இரவில் இந்த பூங்கா, சமூக விரோதிகளின் புகலிடமாக மாறி வருகிறது.

எனவே, சேதமடைந்துள்ள விளையாட்டு உபகரணங்களை சரி செய்து, மின் விளக்குகள் அமைத்து, பூங்காவை முறையாக பராமரிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூலப்பத்திரம் தேவை செங்கை மாவட்டத்தில், 100க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில், ஓ.எஸ்.ஆர்., நிலங்கள் குறித்த விபரங்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி, பேரூராட்சி நிர்வாகத்திடம் இல்லை. ஓ.எஸ்.ஆர்., நிலங்கள் எவை என்பதைக் கண்டறிய, வீட்டு மனை பிரிவுகளுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களின் மூலப்பத்திரம் தேவை. மூலப்பத்திர ஆவணங்கள் மாவட்ட நிர்வாகம் வசம் உள்ளதால், ஓ.எஸ்.ஆர்., நிலங்களை கண்டறிய மாவட்ட நிர்வாகத்தினால் மட்டுமே முடியும். எனவே, செங்கை மாவட்ட நிர்வாகம், ஒவ்வொரு ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சியிலும் உள்ள ஓ.எஸ்.ஆர்., நிலங்கள் குறித்த விபரங்களை, அந்தந்த நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும். பின், ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்கள் அனைத்தும் மீட்கப்பட்டு, பூங்காக்கள் அமைக்க உரிய நிதி ஒதுக்க வேண்டும்.








      Dinamalar
      Follow us