ADDED : பிப் 10, 2026 05:55 AM

தி ருக்கழுக்குன்றம் தத்தலுார் ஊராட்சி மாரியம்மன் கோவில் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக, ஊராட்சி சார்பில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், அடிபம்பு குழாய் அமைக்கப்பட்டது.
தண்ணீர் ஆழத்திற்கு சென்றதால் குழாயில் தண்ணீர் வரவில்லை. தொடர்ந்து, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சிறிய அளவில் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பயனற்று கிடக்கும் அடிபம்பு குழாயால், தெருவில் பாதசாரிகள் நடக்க முடியவில்லை.
மேலும் குழாய் துருப்பிடித்து வருவதால், குழந்தைகள் விளையாடும் போது காலில் குத்தி விடும் சூழல் உள்ளது. மின்தடை ஏற்படும் நேரத்தில் வயதானவர்கள் குழாயின் மீது மோதி காயம்அடைகின்றனர்.
எனவே, ஊராட்சி நிர்வாகம் பயன்பாடின்றி உள்ள குழாயை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரத்தினம், திருக்கழுக்குன்றம்.

