/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பராமரிப்பின்றி வீணாகும் பூங்கா இரவில் மதுக்கூடமாகும் அவலம்
/
பராமரிப்பின்றி வீணாகும் பூங்கா இரவில் மதுக்கூடமாகும் அவலம்
பராமரிப்பின்றி வீணாகும் பூங்கா இரவில் மதுக்கூடமாகும் அவலம்
பராமரிப்பின்றி வீணாகும் பூங்கா இரவில் மதுக்கூடமாகும் அவலம்
ADDED : பிப் 18, 2025 05:45 AM

மறைமலைநகர் : திருப்போரூர் ஒன்றியம், அனுமந்தபுரம் ஊராட்சியில் அனுமந்தபுரம், தாசரிகுப்பம், சந்தகுப்பம், தர்காஸ் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
இங்கு தர்காஸ் கிராமத்தில் உடற்பயிற்சிக்கூடம், நடைபாதை ஆகியவற்றுடன், கடந்த 2014ம் ஆண்டு அம்மா பூங்கா அமைக்கப்பட்டது. இங்கு குழந்தைகள் விளையாட விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சிக்கூடத்தில் உபகரணங்கள் உள்ளிட்டவை பொருத்தப்பட்டன.
நடைபயிற்சி மேற்கொள்ள 'பேவர் பிளாக்' கற்களால் நடைபாதையும், ஓய்வு எடுக்க சிமென்ட் தளத்தில் இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
பூங்கா வளாகத்தில், எல்.இ.டி., விளக்குகளுடன் கூடிய கம்பம், ராட்டினம், சறுக்கு மரம், ஊஞ்சல், கழிப்பறை, குடிநீர் வசதிகள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டன.
இவ்வளவு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தாலும், பூங்காவை ஊராட்சி நிர்வாகம் பராமரிக்காததால், அனைத்து உபகரணங்களும் பழுதடைந்து உள்ளன.
குறிப்பாக, உடற்பயிற்சிக்கூடத்தில் இருந்த பல பொருட்கள் மாயமாகி, விளக்குகள் உடைந்து, கழிப்பறை கதவுகளும் சேதமடைந்து உள்ளன. மேலும், ஆழ்துளைக் கிணறு பயன்பாடு இல்லாமல் காணப்படுகிறது.
இரவில் மதுக்கூடமாகவும் மாறி உள்ளது. இதனால், அப்பகுதிவாசிகள் அதிருப்தியில் உள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
இந்த உடற்பயிற்சிக்கூடம் திறக்கப்பட்ட சில மாதங்கள் மட்டுமே முறையாக பயன்படுத்தப்பட்டது.
பின், முறையான பராமரிப்பு இல்லாததால், இந்த பூங்கா அமைந்துள்ள இடத்தில் மழை காலங்களில் தண்ணீர் தேங்குவதால், இதில் உள்ள பொருட்கள் பாழடைந்து, மக்கள் வரி பணம் வீணாகிறது.
எனவே, பூங்காவை பராமரிக்க நுாறு நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் நபர்களை நியமித்து, பூங்காவை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர, மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.