/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை அரசு மேல்நிலை பள்ளியில் கொள்ளை... 53 லேப் டாப் : பழுதான லேப் டாப் என, நிர்வாகம் மழுப்பல்
/
செங்கை அரசு மேல்நிலை பள்ளியில் கொள்ளை... 53 லேப் டாப் : பழுதான லேப் டாப் என, நிர்வாகம் மழுப்பல்
செங்கை அரசு மேல்நிலை பள்ளியில் கொள்ளை... 53 லேப் டாப் : பழுதான லேப் டாப் என, நிர்வாகம் மழுப்பல்
செங்கை அரசு மேல்நிலை பள்ளியில் கொள்ளை... 53 லேப் டாப் : பழுதான லேப் டாப் என, நிர்வாகம் மழுப்பல்
UPDATED : மார் 27, 2025 02:25 AM
ADDED : மார் 26, 2025 09:16 PM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அரசு மேல்நிலை பள்ளியில் வைக்கப்பட்டிருந்த 53 லேப் டாப்கள் திருடு போயின. இந்த திருட்டில் மாணவர்கள் சிலருக்கும் சம்பந்தம் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து பழுதான லேப் டாப்கள் திருடு போயியுள்ளதாக பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை, 2011ம் ஆண்டு, அப்போதைய முதல்வர் ஜெயலிலதா துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, 2011ம் ஆண்டு முதல் 2019 ம் ஆண்டுவரை, அரசு விலையில்லா மடிக்கணினி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது.
செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம் என இரண்டு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இந்தகல்வி மாவட்டங்களில், அரசு மேல் நிலைப்பள்ளிகள் 80 அரசு உதவி பெறும் பள்ளிகள் 22 என மொத்தம் 102 பள்ளிகள் உள்ளன.
இங்கு, 2011ம் ஆண்டு முதல், பள்ளி மாணவ, மாணவியருக்கு, விலையில்லா மடிக்கணினி, 2019 ம் ஆண்டு வரை வழங்கினர். தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல் நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, மடிகணினி வழங்கும் திட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், 2019 ம் ஆண்டு, அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய மடிக்கணினி, மாணவர்களுக்கு வழங்கப்பட்டது போக மீதம் இருந்த 596 மடிக்கணினிகள் செங்கல்பட்டு அறிஞர் அண்ணா நகராட்சி மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள, ஒரு அறையில், வைக்கப்பட்டிருந்தன.
நேற்று முன்தினம் மடிக்கணினி வைக்கப்பட்டு இருந்த அறையின் ஜன்னல் உடைக்கப்பட்டு அவ்வழியாக மடிக்கணினிகள் திருடப்பட்டு இருந்ததை கண்ட மாணவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.
பள்ளி நிர்வாகத்தினர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக அதிகாரிகள் அந்த அறையில் சோதனை செய்தபோது 53 மடிக்கணினிகள் மாயமானது தெரிய வந்தது.
இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் சென்று நடத்திய விசாரணையில் பள்ளி வளாகத்தில் உள்ள மற்றொரு பாழடைந்த கட்டடத்தின் வழியாக வந்த மர்ம நபர்கள் அறை ஜன்னலை உடைத்து மடிக்கணினிகளை திருடிச் சென்றது தெரிய வந்தது.
இச்சம்பவம் தொடர்பாக மாணவர்கள் எட்டு பேர் மற்றும் செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த ஏழுமலை, 20. என்பவரை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று நடத்திய விசாரணையில் அவர்களிடமிருந்து 13 மடிக்கணினிகள் மற்றும் 6 மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மீதம் உள்ள மடிக்கணினிகளை யாரிடம் கொடுத்து வைத்து உள்ளனர் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, பள்ளி கல்வித்துறை ஒரு அதிகாரிகள் கூறுகையில், 'அரசு பள்ளி மாணவர்களுக்கு மடிகணினி வழங்கப்பட்டது. மீதமிருந்த மடிகணினிகள் பிற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பழுதடைந்த மடிக்கணினிகள் மட்டும் பள்ளி அறையில் வைக்கப்பட்டிருந்தது. மடிகணினி திருடுபோனது தொடர்பாக, போலீசில் புகார் செய்துள்ளோம். நாங்களும் விசாரணை நடத்தி வருகிறோம்' என்றனர்.