/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மின்வாரிய அலுவலகத்தில் வாகன வசதி இல்லை பொருட்கள் எடுத்து செல்வதில் தொடரும் சிக்கல் அச்சிறுபாக்கம் விவசாயிகள் வேதனை
/
மின்வாரிய அலுவலகத்தில் வாகன வசதி இல்லை பொருட்கள் எடுத்து செல்வதில் தொடரும் சிக்கல் அச்சிறுபாக்கம் விவசாயிகள் வேதனை
மின்வாரிய அலுவலகத்தில் வாகன வசதி இல்லை பொருட்கள் எடுத்து செல்வதில் தொடரும் சிக்கல் அச்சிறுபாக்கம் விவசாயிகள் வேதனை
மின்வாரிய அலுவலகத்தில் வாகன வசதி இல்லை பொருட்கள் எடுத்து செல்வதில் தொடரும் சிக்கல் அச்சிறுபாக்கம் விவசாயிகள் வேதனை
ADDED : நவ 18, 2024 03:28 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கீழ், இயக்குதல் மற்றும் பராமரித்தல் செயற்பொறியாளர் அலுவலகம் அமைந்துள்ளது.
இக்கோட்டத்தின் கீழ், நுகும்பல், அச்சிறுபாக்கம் நகரம் மற்றும் ஊரகம், ஒரத்தி 1, 2, எலப்பாக்கம், தொழுப்பேடு, மேல்மருவத்துார், சித்தாமூர், சூணாம்பேடு உள்ளிட்ட பிரிவுகள் உள்ளன.
இப்பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வீட்டு மின் இணைப்பு மற்றும் விவசாய பயன்பாடு, வணிக பயன்பாடு உள்ளிட்ட தேவைகளுக்காக, 90,000 மின் இணைப்புகள் உள்ளன.
புதிதாக மின் இணைப்பு பெறும் நபர்களுக்கு, அச்சிறுபாக்கம் துணை பண்டக சாலையில் இருந்து மின் கம்பம், மின் மாற்றி மற்றும் மின் ஒயர் போன்ற தளவாடப் பொருட்களை எடுத்துச் செல்ல, மின் வாரியத் துறைக்கு சொந்தமான வாகனம் ஏதும் இல்லை.
இதனால், விவசாயிகள் அவர்களுக்கு சொந்தமான மற்றும் வாடகை இயந்திரங்கள் வாயிலாக, மின் கம்பங்கள் மற்றும் தளவாடப் பொருட்களை எடுத்துச் செல்கின்றனர். துணை பண்டக சாலையில், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக வாகனம் இன்றி உள்ளது.
சில தினங்களுக்கு முன், எலப்பாக்கம் பகுதிக்கு, அச்சிறுபாக்கம் துணை பண்டக சாலையிலிருந்து மின்கம்பங்கள் எடுத்துச் சென்ற டிராக்டர் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 11ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர் உயிரிழந்தார்.
இது குறித்து, ஆணைக்குன்னம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ரவி, 47, கூறியதாவது:
அச்சிறுபாக்கம் பண்டக சாலையில் இருந்து மின் இணைப்பு தேவைப்படும் விவசாயிகள், அவர்களுக்கு சொந்தமான அல்லது வாடகை வாகனங்கள் வாயிலாக, தளவாடப் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.
இதனால், பொருளாதார சிக்கல் ஏற்படுகிறது. மின்மாற்றி பழுது ஏற்பட்டால், மின்வாரியத் துறைக்கு சொந்தமான வாகனங்கள் இல்லாத காரணத்தால், விவசாயிகளையே வாகனத்தில் மின்மாற்றியை எடுத்துச் செல்லக்கூறி, மின் வாரிய ஊழியர்கள் நிர்ப்பந்தம் செய்கின்றனர்.
மின் வாரியத் துறைக்குக்கு சொந்தமான பண்டக சாலையில் இருந்து பொருட்கள் எடுத்துச் செல்ல, புதிதாக வாகனம் வாங்கி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். தமிழக அரசு, இது குறித்து உரிய நடவடிக்கை வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, அச்சிறுபாக்கத்தில் உள்ள இயக்குதல் மற்றும் பராமரித்தல் அலுவலக செயற்பொறியாளர் செந்தாமரை கூறியதாவது:
அச்சிறுபாக்கம் மின் கோட்டத்திற்கு உட்பட்டு, மின்வாரிய பயன்பாட்டிற்காக, புதிய வாகனம் இல்லை. புதிய வாகனம் வாங்குவது குறித்து, அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
அவசரமாக தேவைப்படும் விவசாயிகள், சொந்த விருப்பத்தின் பேரில், தனியாக வாகனங்கள் அமைத்து மின் தளவாடப் பொருட்களை, பண்டக சாலையில் இருந்து எடுத்து செல்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.