/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மழையில் நனையும் திருக்கச்சூர் கோவில் தேர்
/
மழையில் நனையும் திருக்கச்சூர் கோவில் தேர்
ADDED : அக் 25, 2025 10:36 PM

மறைமலை நகர்: திருக்கச்சூர் கச்சபேசுவரர் கோவில் தேர் மழையில் நனைந்து வீணாகி வருகிறது.
சிங்கபெருமாள் கோவில் அடுத்த திருக்கச்சூர் கிராமத்தில் பழமையான அஞ்சனாட்சி தாயார் உடனுறை கச்சபேசுவரர் கோவில் உள்ளது.
இக்கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவம், தேரோட்டம் விமரிசையாக நடைபெறும். கடந்த மூன்று ஆண்டுகளாக திருப்பணி காரணமாக தேரோட்டம் நடைபெறவில்லை.
தேரோட்டம் நடைபெறாததால் தேர் கோவிலுக்கு எதிரில் கிழக்கு மாடவீதியில் நிறுத்தப்பட்டு இரும்பு தகடுகள் கொண்டு மூடப்பட்டு இருந்தன. மழைக்காலத்தில் தேரின் உட்புறத்தில் தண்ணீர் செல்வதால் தேர் வீணாகும் அபாயம் ஏற்பட்டது. எனவே கான்கிரீட் சுவர் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், 23 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்தாண்டு மே மாதம் பணி துவங்கியது.
இதற்காக தேர் அங்கிருந்து கோவில் எதிரே உள்ள காலி இடத்தில் நிறுத்தப்பட்டு தார்ப்பாய் கொண்டு மூடி வைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக பெய்த மழை மற்றும் காற்றால் தார்ப்பாய் கிழிந்து தேர் மழையில் நனைந்து வருகிறது.
எனவே தேர் நிறுத்த கூடத்தின் வரும் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்கவும், தேர் நனையாமல் இருக்கவும் கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

