/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்போரூர் பர்னிச்சர் கடை செக்யூரிட்டி வேலைக்கு சேர்ந்த நாளே அடித்து கொலை
/
திருப்போரூர் பர்னிச்சர் கடை செக்யூரிட்டி வேலைக்கு சேர்ந்த நாளே அடித்து கொலை
திருப்போரூர் பர்னிச்சர் கடை செக்யூரிட்டி வேலைக்கு சேர்ந்த நாளே அடித்து கொலை
திருப்போரூர் பர்னிச்சர் கடை செக்யூரிட்டி வேலைக்கு சேர்ந்த நாளே அடித்து கொலை
ADDED : செப் 27, 2024 12:40 AM

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த காலவாக்கம் பகுதியில், ஓ.எம்.ஆர்., சாலையை ஒட்டி புதிய பர்னிச்சர் கடை திறப்பதற்கான வேலை நடந்து வருகிறது. இன்னும் 10 நாட்களில் கடை திறக்கப்பட உள்ளது.
அங்கு செக்யூரிட்டியாக வேலை செய்தவர், நேற்று முன்தினம் வேலையை விட்டு நின்றுவிட்டார். அதனால், புதிய செக்யூரிட்டி அனுப்பும்படி, ஒப்பந்த நிறுவனத்திடம் பர்னிச்சர் கடை நிர்வாகம் கேட்டுள்ளது.
இதையடுத்து, நேற்று முன்தினம், பெரம்பலுார் மாவட்டத்தை சேர்ந்த ராமர், 41, என்பவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு, பர்னிச்சர் கடையில் பணிக்கு சேர்ந்தார்.
வழக்கம்போல், மாலை கடை மூடிவிட்டு கிளம்பிய ஊழியர் பாபு என்பவர், சாவியை செக்யூரிட்டியிடம் கொடுத்துவிட்டு சென்றனர்.
ஏற்கனவே, அங்கு 10 நாட்களாக லோடு இறக்கும் வேலை செய்யும் அசோக் என்பவர், இரவு நேரத்திலும் பர்னிச்சர் கடையில் தங்குவதாக கூறப்படுகிறது.
இரவு 10:00 மணியளவில், கடையை மூடிவிட்டு சென்ற ஊழியர் பாபு, செக்யூரிட்டி ராமருக்கு போன் செய்து விசாரித்துள்ளார். அப்போது, லோடு இறக்கும் வேலை செய்யும் அசோக் குடித்துவிட்டு கடை எதிரே கிடந்ததாகவும் அவரை துாக்கிக் கொண்டுபோய் கடை நுழைவாயிலில் விட்டு வந்ததாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை 11:00 மணி வரை கடை திறக்கப்படாததை கண்ட அருகேயுள்ள கட்டடத்தின் உரிமையாளர், மொட்டைமாடி வழியாக இறங்கி பார்த்தபோது, இரண்டாவது தளத்தில், செக்யூரிட்டி ராமர் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடன் இருந்த அசோக், அங்கு இல்லை.
இது குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த ஏ.டி.எஸ்.பி., வேல்முருகன், மாமல்லபுரம் டி.எஸ்.பி., ரவிஅபிராம், திருப்போரூர் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
பின், போலீசார் கூறியதாவது:
ராமர் 3 அடி உயர மரக்கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இருவரும் சேர்ந்து மது அருந்திய போது தகராறு ஏற்பட்டு கொலை நிகழ்ந்திருக்கலாம் என, சந்தேகம் எழுந்துள்ளது.
எனினும், தலைமறைவாக இருக்கும் அசோக்கை பிடித்தால் மட்டுமே உண்மை தெரியும். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தொடர்ந்து, ராமரின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
பின், அங்கிருந்த அந்த கட்டையை போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோல், 'சிசிடிவி' பதிவு ஹார்டிஸ்க்கை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.