/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லபுரம் ஒளிரும் பூங்கா திட்டத்தில் அதிருப்தி சுற்றுலா துறை விளக்கம் தர உறுதிமொழி குழு உத்தரவு
/
மாமல்லபுரம் ஒளிரும் பூங்கா திட்டத்தில் அதிருப்தி சுற்றுலா துறை விளக்கம் தர உறுதிமொழி குழு உத்தரவு
மாமல்லபுரம் ஒளிரும் பூங்கா திட்டத்தில் அதிருப்தி சுற்றுலா துறை விளக்கம் தர உறுதிமொழி குழு உத்தரவு
மாமல்லபுரம் ஒளிரும் பூங்கா திட்டத்தில் அதிருப்தி சுற்றுலா துறை விளக்கம் தர உறுதிமொழி குழு உத்தரவு
ADDED : டிச 11, 2024 11:29 PM

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக இடத்தில் தனியார் நிறுவனம் அமைக்கும் ஒளிரும் பூங்கா திட்டம் குறித்து, அரசு உறுதிமொழி குழுவினர் அதிருப்தி தெரிவித்தனர். திட்டம் குறித்து விளக்கம் அளிக்கவும், சுற்றுலா துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், கடந்த 2009ல் மாமல்லபுரம் தொல்லியல் துறை அலுவலகம் அருகில், 60 லட்சம் ரூபாய் மதிப்பில், 2.47 ஏக்கர் பரப்பில் மரகத பூங்கா அமைத்தது.
சுற்றுலா பயணியர் இளைப்பாற, பூங்கா அவசியம் என, நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியிடப்பட்டதை தொடர்ந்து, மரகத பூங்கா அமைக்கப்பட்டது.
மலர்ச்செடிகள், புல்வெளி, கலாசார கலை நிகழ்ச்சிகள் நடத்த திறந்தவெளி மாடம் உள்ளிட்டவற்றுடன், பூங்கா அமைக்கப்பட்டது.
துவக்கத்தில் சுற்றுலாத்துறை, வார இறுதியில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி, நிகழ்ச்சியின் போது மட்டும் பயணியரை அனுமதித்தது.
மற்ற நாட்களில் பயணியரை பூங்காவில் அனுமதிக்கவில்லை.
நாளடைவில், பூங்கா பயனின்றி சீரழிந்தது. இந்திய பிரதமர் மோடி - சீன அதிபர் ஷீ ஜின்பிங் ஆகியோர், கடந்த 2019ல் இங்கு சந்தித்த போது, பூங்கா 30 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டது. ஆனால், மீண்டும் பயணியரை அனுமதிக்காமல், ஐந்து ஆண்டுகளாக வீணானது.
இப்பூங்காவை சுற்றுலாவுக்கு மேம்படுத்த வலியுறுத்திய நிலையில், தனியார் முதலீடு பங்களிப்பில் இதை 'ஒளிரும் தோட்டமாக' அமைக்க, சுற்றுலா நிர்வாகம் முடிவெடுத்தது.
இதையடுத்து, எல்.இ.டி., மின்னொளியில் விலங்குகள், பறவைகள், தாவரங்கள், தண்ணீர் பூங்கா, செயற்கை நீரூற்று ஆகியவை பிரகாசிப்பது, '5டி' தியேட்டர், உணவகம் உள்ளிட்ட பொழுதுபோக்கு வசதிகளுடன், 'ஒளிரும் பூங்கா' அமைக்க திட்டமிடப்பட்டது.
கடந்த 2023 செப்டம்பரில் பூமிபூஜை நடத்தியும், ஒப்பந்த குளறுபடியால் பணிகள் துவக்குவது ஓராண்டாக தாமதமானது.
கடந்த செப்டம்பரில் பழைய பூங்கா அழிக்கப்பட்டு, ஒளிரும் பூங்கா பணிகளை ஒப்பந்த நிறுவனம் துவக்கியது.
நிலத்தடியில் மின்வடங்கள் பதிக்கப்பட்டுள்ளன. வேறிடத்தில் உருவாக்கியுள்ள பூங்கா நிர்மாண கட்டமைப்பை இங்கு நிறுவ, தற்போது ஆழமான பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
அனைத்து பணிகளையும் முடித்து, வரும் ஜனவரியில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இச்சூழலில் மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், சுற்றுலா துறையினர் ஆகியோருடன் பூங்கா பணிகளை, அரசு உறுதிமொழி குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது, குழு தலைவர் பண்ருட்டி எம்.எல்.ஏ., வேல்முருகன், இத்திட்டம் செயல்படுத்தப்படுவது குறித்து, முன்பே தெரிவிக்காததாக அதிருப்தி தெரிவித்தார்.
மேலும் பூங்கா பரப்பு, மதிப்பீடு, ஒப்பந்தம், தொல்லியல் அனுமதி உள்ளிட்ட விபரங்கள் குறித்து, சுற்றுலா துறையினரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
அத்துறையினர் சரியான பதில் அளிக்காமல் மழுப்பியதால், விரிவான திட்ட அறிக்கை மற்றும் ஏற்பாடு இல்லாமல் பணிகள் நடக்கிறாதா என, மீண்டும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு சுற்றுலா துறை அலுவலர்கள்,'ஒப்பந்த நிறுவனம் 6 கோடி ரூபாய் மதிப்பில், சொந்த முதலீட்டில் பூங்கா திட்டத்தை செயல்படுத்தி, சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு மாதம் 2 லட்சம் ரூபாய் அளிப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது' என தெரிவித்தனர்.
அப்போது, குழு தலைவர் வேல்முருகன், அரசின் பெரும்பரப்பு இடத்திற்கு அளிக்கப்படும் தொகை குறைவாக உள்ளதாக தெரிவித்தார்.
இதற்கு, மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், சில நாட்களுக்கு முன்பு தான் பணிகளை துவக்கியதாகவும், கட்டமைப்புகள் தற்காலிகமானவை என்பதால், வாய்மொழி அனுமதி பெற்றுள்ளதாகவும், உரிய அனுமதி பெற முயற்சிப்பதாகவும் கூறினார்.
விளக்கத்தில் திருப்தியடையாத குழு தலைவர் வேல்முருகன், ஒளிரும் பூங்கா திட்டம் குறித்து சுற்றுலா இயக்குனர் உள்ளிட்டோர், அரசு உறுதிமொழி குழுவிடம் நேரடி விளக்கம் அளிக்க உத்தரவிட்டார்.
விளக்கம் ஏற்புடையதா என்பதை பொறுத்து முடிவெடுப்பதாகவும், இந்த இடத்திற்காக ஒப்பந்த நிறுவனத்திடம் கூடுதல் தொகை பெற முயற்சிக்குமாறும் தெரிவித்தார்.
தொல்லியல் துறை அனுமதி சிக்கல், அரசின் பெரும்பரப்பு இடத்தை குறைவான பங்களிப்பு தொகைக்கு ஒப்புதல் அளித்தது குறித்து, யாராவது வழக்கு தொடரலாம் என்பதால், இந்த சிக்கல்கள் இல்லாமல் திட்டத்தை செயல்படுத்த அறிவுறுத்தினார்.