/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தரைப்பால பணியால் வண்டலுார் -- கேளம்பாக்கம் சாலையில் நெரிசல் ...தினமும் போராட்டம்;உயிரியல் பூங்கா சந்திப்பில் திக்குமுக்காடும் வாகன ஓட்டிகள்
/
தரைப்பால பணியால் வண்டலுார் -- கேளம்பாக்கம் சாலையில் நெரிசல் ...தினமும் போராட்டம்;உயிரியல் பூங்கா சந்திப்பில் திக்குமுக்காடும் வாகன ஓட்டிகள்
தரைப்பால பணியால் வண்டலுார் -- கேளம்பாக்கம் சாலையில் நெரிசல் ...தினமும் போராட்டம்;உயிரியல் பூங்கா சந்திப்பில் திக்குமுக்காடும் வாகன ஓட்டிகள்
தரைப்பால பணியால் வண்டலுார் -- கேளம்பாக்கம் சாலையில் நெரிசல் ...தினமும் போராட்டம்;உயிரியல் பூங்கா சந்திப்பில் திக்குமுக்காடும் வாகன ஓட்டிகள்
UPDATED : ஆக 17, 2025 09:31 PM
ADDED : ஆக 17, 2025 09:28 PM

வண்டலுார்:வண்டலுார் - -கேளம்பாக்கம் இடையிலான 18.6 கி.மீ., சாலையில், ஊனமாஞ்சேரி பகுதியில் தரைப்பாலம் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது. இதனால், வண்டலுார் உயிரியல் பூங்கா சந்திப்பில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் திக்குமுக்காடுவதால், சாலையை தரம் உயர்த்த வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
![]() |
சென்னையின் முக்கிய நுழைவுப் பகுதியாக உள்ள வண்டலுார்- - கேளம்பாக்கம் இடையிலான 18.6 கி.மீ., சாலையில், ஒரு மணி நேரத்தில், 2,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கின்றன.
தற்போது, வண்டலுார் - -கேளம்பாக்கம் சாலை சில இடங்களில் ஆறுவழிச் சாலையாகவும், பல இடங்களில் நான்கு வழிச் சாலையாகவும் உள்ளது.
இந்த சாலையின் மொத்த வாகனப் போக்குவரத்தில், 60 சதவீதம் இருசக்கர வாகனங்கள், 32 சதவீதம் ஆட்டோ, கார் ஆகிய வாகனங்கள், 8 சதவீதம் கனரக வாகனங்கள் பயணிப்பதாக, புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
தாம்பரம் சுற்றுப் பகுதியில் வசிப்போர் வேலை, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல தேவைகளுக்காக, ஓ.எம்.ஆர்., சாலையில் உள்ள சோழிங்கநல்லுார், துரைப்பாக்கம், சிப்காட் பூங்கா, நாவலுார் மற்றும் திருப்போரூர், மாமல்லபுரம் ஆகிய இடங்களுக்கு பயணிக்க, இந்த சாலையே பிரதான வழித்தடமாக உள்ளது.
தற்போது, பெருங்களத்துார் முதல் செங்கல்பட்டு வரையிலான ஜி.எஸ்.டி., சாலையின் போக்குவரத்திற்கு இணையாக, வண்டலுார் -- கேளம்பாக்கம் சாலையில் போக்குவரத்து உள்ளது.
ஆனால், தொடர்ந்து அதிகரிக்கும் வாகன போக்குவரத்திற்கு ஏற்ப, இந்த சாலையில் உரிய வசதிகள் இல்லை என, பல தரப்பினரும் புகார்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
வண்டலுார் -- கேளம்பாக்கம் சாலையை தமிழக அரசின் நெடுஞ்சாலை துறை கட்டமைத்து, பராமரித்து வருகிறது. ஆனால், சாலையின் அகலம் நேர்த்தியாகவும், முறையாகவும் இல்லை.
ஊனமாஞ்சேரி சந்திப்பு உள்ளிட்ட பல இடங்களில், 40 அடிக்கும் குறைவான அகலத்தில் சாலை உள்ளதால், 'பீக் ஹவர்ஸ்'சில் இந்த இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பல இடங்களில் சாலை குறுகியும், சாலையின் இடது ஓரம் மேடு பள்ளமாகவும் உள்ளன. இதனால், கட்டுப்பாடற்ற வேகத்தில் கார்கள், கனரக வாகனங்கள் பயணிப்பதால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்துடனேயே பயணிக்க வேண்டி உள்ளது.
அத்துடன், ஊனமாஞ்சேரி எல்லைக்கு உட்பட்ட இடத்தில், சாலையின் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கம், 20 அடி அகலம், 5 அடி ஆழம், 65 அடி நீளமுள்ள தரைப்பாலம் அமைக்கும் பணி, 70 லட்சம் ரூபாய் செலவில், கடந்த மே மாதம் முதல் நடந்து வருகிறது.
இந்த தரைப்பாலம் கட்டுமான பணி நடக்கும் இடத்தில், 100 மீ., துாரத்திற்கு, ஒருவழிப் பாதையாக சாலை மாற்றப்பட்டு உள்ளதால், 500 மீ., துாரத்திற்கு அனைத்து வாகனங்களும், மெதுவாக செல்ல வேண்டிய நிலை தொடர்கிறது.
இதனால், காலை 7:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இந்த இடத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, இந்த தரைப்பாலத்தின் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவிர, வண்டலுார் -- கேளம்பாக்கம் இடையிலான சாலையில், 20க்கும் மேற்பட்ட தனியார் கல்லுாரிகள், 30க்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வருகின்றன.
'பீக்- ஹவர்ஸ்'சில் இந்த கல்லுாரி, பள்ளிகளுக்குச் சொந்தமான 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலைக்குள் நுழைவதால், வண்டலுார் உயிரியல் பூங்கா சந்திப்பில், தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால், மற்ற வாகன ஓட்டிகள் நத்தை வேகத்தில் நகர்ந்து செல்ல வேண்டியுள்ளது. ஆம்புலன்ஸ் வாகனங்களும், இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பது தொடர்கதையாகி வருகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி, வண்டலுார் -- கேளம்பாக்கம் சாலையில் பயணிக்கும் வாகனங்கள் எண்ணிக்கை மற்றும் அடுத்த 10 ஆண்டுகளில் அதிகரிக்கும் வாகனப் போக்குவரத்திற்கு ஏற்ப, வண்டலுார் - - கேளம்பாக்கம் சாலையை தரம் உயர்த்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வண்டலுார் - கேளம்பாக்கம் இடையிலான சாலையில், 20க்கும் மேற்பட்ட தனியார் கல்லுாரிகள், 30க்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வருகின்றன. 'பீக்- ஹவர்ஸ்'சில் இந்த கல்லுாரி, பள்ளிகளுக்குச் சொந்தமான 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலைக்குள் நுழைவதால், வண்டலுார் உயிரியல் பூங்கா சந்திப்பில், தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.