ADDED : ஏப் 27, 2026 10:48 PM
அரக்கோணம்: அரக்கோணம் ரயில் நிலைய சந்திப்பு பணிமனையில் செய்ய உள்ள பராமரிப்பு பணிகளால், ஏழு மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கை:
அரக்கோணம் ரயில்வே பணிமனையில், பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. அதையொட்டி, சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மார்க்கத்தில், திருத்தணி - அரக்கோணத்திற்கு, நேற்று முதல், மே 16ம் தேதி வரை இரவு, 9:15, 11:10 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், ரத்து செய்யப்படுகின்றன.
அதேபோல், அரக்கோணம் - திருத்தணிக்கு நேற்று முதல், மே 17ம் தேதி வரை அதிகாலை, 4:00, 5:00 மணி மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
பகுதி ரத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, அரக்கோணத்திற்கு நேற்று முதல், மே 16ம் தேதி வரை, காலை, 11:00 மணி மற்றும் இரவு 10:55 மணி மின்சார ரயில்கள், திருவாலங்காடு - அரக்கோணம் இடையே பகுதி ரத்து செய்யப்படுகின்றன.
அதே நாட்களில், திருத்தணி - சென்னை சென்ட்ரலுக்கு மதியம் 12:35 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், திருத்தணி - திருவாலங்காடு இடையே பகுதி ரத்து செய்யப்படுகின்றன. இந்த ரயில், திருவாலங்காடு - சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
