காட்டுப்பன்றிகளை சுட்டு கொல்ல வனத்துறையினருக்கு பயிற்சி!விளை நிலங்கள் தப்பிக்கும் என விவசாயிகள் நம்பிக்கை
காட்டுப்பன்றிகளை சுட்டு கொல்ல வனத்துறையினருக்கு பயிற்சி!விளை நிலங்கள் தப்பிக்கும் என விவசாயிகள் நம்பிக்கை
UPDATED : செப் 01, 2026 10:13 PM
ADDED : செப் 01, 2026 10:03 PM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட விவசாய நிலங்களில் நெற்பயிர், கரும்பு மற்றும் தோட்டக்கலை துறை பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி, அட்டூழியம் செய்து வருகின்றன. இதனால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகள் கோரிக்கையின்படி, காட்டுப்பன்றிகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்தவும், தேவைப்பட்டால் துப்பாக்கியால் சுட்டு கொல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக, வனத்துறை ஊழியர்களுக்கு இரண்டு மாத துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 1.67 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இதில், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய ஐந்து தாலுகாக்களில் நெற்பயிர், கரும்பு மற்றும் தோட்டக்கலைத்துறை பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், வண்டலுார் ஆகிய பகுதிகளில் ஐந்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் மொத்தம் 42 ஆயிரத்து 650 ஏக்கர் பரப்பளவில், வனப்பகுதி அமைந்துள்ளது.
இந்த வனப்பகுதிக்குள், 10 ஆண்டுகளில் காட்டுப்பன்றிகளின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளது. கூட்டம் கூட்டமாக வரும் காட்டுப்பன்றிகள் நிலப்பகுதிக்குள் புகுந்து நெற்பயிர்கள், கரும்பு மற்றும் தோட்டக்கலை பயிர்களை சேதப்படுத்தி அழிக்கின்றன. தவிர, கிராமங்களிலும் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், செய்யூர், திருப்போரூர் வட்டாரங்களில், அனைத்து பகுதிகளிலும் காட்டுப்பன்றிகளால் தினமும், பல்வேறு பிரச்னைகளை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.
பல ஆயிரம் ஏக்கரில் விவசாய சாகுபடி கேள்விக்குறியாகி வருகிறது. வரப்பு, பயிர்களை அழித்தல், விளைபொருட்கள் மற்றும் பாசன கட்டமைப்புகளை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதால், பல்வேறு நெருக்கடிகளை, அவர்கள் சந்தித்து வருகின்றனர்.
காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு, அரசு சார்பில் உரிய நிவாரணம் கிடைப்பதில்லை எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல, வனத்துறையினருக்கு, ஊனமாஞ்சேரியில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில், துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் யானை மற்றும் காட்டுப்பன்றிகளால், விவசாய நிலங்களை சேதப்படுத்துவதை தடுக்க, வனத்துறையிலிருந்து 3 கி.மீ., துாரத்தில் உள்ள பன்றிகளை சுட, 2025ல் அரசு உத்தரவிட்டது.
காப்புக்காட்டில் இருந்து ஒரு கி.மீ., துாரம் உள்ள பகுதியில் காட்டுப்பன்றிகளை சுட அனுமதி இல்லை. 3 கி.மீ., தொலைவிற்கு மேல் உள்ள பகுதியில் நடமாடும் காட்டுப்பன்றிகளை சுட வனத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த, 17 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த குழுவினர், விவசாய நிலங்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதை கண்டறிந்து, சேத விபரங்களை, வனச்சரக அலுவலருக்கு அறிக்கையாக அனுப்பி வைப்பர்.
இந்நிலையில், பன்றிகளை சுடுவதற்கு, வனத்துறை ஊழியர்களுக்கு, துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஊனமாஞ்சேரியில் இரு மாதங்களுக்கு இப்பயிற்சி நடத்தப்படும்.
முடிந்ததும், காட்டுப்பன்றி அட்டகாசம் உள்ள பகுதிகளில் ஆய்வு செய்து, அவற்றை சுட்டுக்கொல்லும் பணியில் வனத்துறையினர் ஈடுபடுவர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த ஊராட்சிகளில் அமைக்கப்பட்ட குழு, செயல்படாமல் முடங்கி உள்ளது. இந்த குழுவினர், பயிர்கள் சேதம் குறித்து, வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிப்பதில்லை.
நெற்பயிர், கரும்பு மற்றும் தோட்டக்கலை பயிர்களை காட்டுப்பன்றிகள் அழிப்பதை, விவசாயிகளே, கலெக்டர் மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் முறையிடுகின்றனர்.
எனவே, காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட குழுவினர் செயல்படவும், பன்றிகளை கட்டுப்படுத்தவும், வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
