/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் பயன்பாடின்றி வீணாகும் மின்மாற்றிகள்
/
செங்கையில் பயன்பாடின்றி வீணாகும் மின்மாற்றிகள்
ADDED : நவ 26, 2025 04:50 AM

செங்கல்பட்டு, நவ. 26-
செங்கல்பட்டில், மின்னழுத்த குறைபாட்டை சீரமைக்க அமைக்கப்பட்ட இரண்டு மின்மாற்றிகளையும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு நகராட்சி பகுதியில், நகராட்சி அலுவலகம், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, சப் - கலெக்டர் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், வணிக வளாகங்கள், கடைகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் உள்ளன.
இந்த அலுவலகங்களுக்கு மின் வினியோகம் செய்ய, செங்கல்பட்டு நகர உதவி செயற்பொறியாளர் அலுவலகம், அண்ணா நகர் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகம் ஆகியவை உள்ளன.
இந்நிலையில், செங்கல்பட்டு நகரில் மின்னழுத்த குறைபாடுகளை சீரமைக்க, மத்திய அரசு திட்டத்தின் கீழ் 2014ம் ஆண்டு, 40 கே.வி., திறன், 60 கே.வி., திறன் கொண்டு மின்மாற்றிகள் அமைக்கப்பட்டன.
இதில், செங்கல்பட்டு அண்ணா சாலை கோதண்டராமர் கோவில் குளம் அருகில், 40 கே.வி., திறன் கொண்ட மின்மாற்றி அமைக்கப்பட்டது.
இதேபோன்று, சப் - கலெக்டர் அலுவலகம் அருகே ஒரு மின்மாற்றி அமைக்கப்பட்டது.
இந்த மின்மாற்றிகள் பயன்பாட்டிற்கு வராத நிலையில், அங்கு மரங்கள் வளர்ந்து மூடியுள்ளன. மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டுவரப்படாமல், இந்த மின்மாற்றிகள் வீணாகி வருகின்றன.
இப்பகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் வணிகர்கள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, நகரில் உள்ள இரண்டு மின்மாற்றிகளையும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

