/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாடு, ஆடுகள் திருட்டு இருவருக்கு 'காப்பு'
/
மாடு, ஆடுகள் திருட்டு இருவருக்கு 'காப்பு'
ADDED : டிச 21, 2024 11:35 PM

கூடுவாஞ்சேரி:நந்திவரம் - கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் நகராட்சி, பெருமாட்டுநல்லுார், காயரம்பேடு உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் சில நாட்களாக ஆடு, மாடுகள் காணாமல் போனது.
இதுகுறித்து அதன் உரிமையாளர்கள், கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, கூடுவாஞ்சேரி போலீசார் தனிப்படை அமைத்து, சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
இதையடுத்து, இதில் தொடர்புள்ள, ஆப்பூர் பகுதியைச் சேர்ந்த கலைவாணன், 32, காட்டாங்கொளத்துார் பகுதியைச் சேர்ந்த மாட்டு இறைச்சி கடை உரிமையாளர் சங்கர், 47, ஆகிய இருவரையும், நேற்று கைது செய்தனர்.
இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:
கைது செய்யப்பட்ட கலைவாணன், ஏழை விவசாயிகளை அணுகி, அவர்களுடைய மாடு, ஆடுகளை வாங்குவது போல நோட்டமிட்டுள்ளார்.
பின், இரவு நேரத்தில் அந்த மாடு, ஆடுகளைத் திருடி, மாட்டு இறைச்சி கடை நடத்தி வரும் சங்கரிடம் தொடர்ந்து விற்பனை செய்து வந்துள்ளார்.
சங்கரின் இறைச்சி கடையில் சென்று பார்த்த போது மாடு, ஆடுகளின் தோல் பதப்படுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இருபதுக்கும் மேற்பட்ட ஆடு, மாடுகளை திருடியுள்ளனர்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
இதற்கிடையில், மாடு திருடிய வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டது அறிந்து, மாட்டை இழந்த விவசாயிகள், தங்களது மாடு கிடைத்துவிடும் என்ற ஆசையில், காவல் நிலையத்திற்கு வந்தனர். ஆனால், மாடுகள் இறைச்சியாக விற்பனை செய்யப்பட்டது தெரிந்ததும், வேதனையடைந்தனர்.