/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மென்பொருள் நிறுவன பெண் ஊழியரை பலாத்காரம் செய்த இருவருக்கு தலா '20 ஆண்டு'
/
மென்பொருள் நிறுவன பெண் ஊழியரை பலாத்காரம் செய்த இருவருக்கு தலா '20 ஆண்டு'
மென்பொருள் நிறுவன பெண் ஊழியரை பலாத்காரம் செய்த இருவருக்கு தலா '20 ஆண்டு'
மென்பொருள் நிறுவன பெண் ஊழியரை பலாத்காரம் செய்த இருவருக்கு தலா '20 ஆண்டு'
ADDED : அக் 28, 2025 10:37 PM
செங்கல்பட்டு: தனியார் மென்பொருள் நிறுவன பெண் ஊழியரை கொலை செய்வதாக மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், இருவருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம், தீர்ப்பளித்தது.
சென்னை, மேடவாக்கம் பள்ளிக்கரணையைச் சேர்ந்த 31 வயது பெண், தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 2022 செப்., 23ம் தேதி, இவரது வீட்டில் இருந்த 'ஏசி' பழுதாகி உள்ளது.
இதை சரிசெய்ய, சென்னை புரசைவாக்கம் ரத்னசபாபதி தெருவைச் சேர்ந்த அற்புதராஜ், 32, புரசைவாக்கம் பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அருண், 31, ஆகியோர், பெண் வீட்டிற்கு வந்துள்ளனர்.
அப்போது, பெண்ணின் வாயில் துணியை வைத்து அழுத்தி, கட்டிலில் கயிறால் கைகளை கட்டிப்போட்டு, கொலை செய்து விடுவதாக மிரட்டி, இருவரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
அதன் பின், பெண் அணிந்திருந்த நகை, பணம், மொபைல் போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனர். இதுகுறித்த புகாரை விசாரித்த பள்ளிக்கரணை போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட அற்புதராஜ், அருண் ஆகியோரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு விசாரணை, செங்கல்பட்டு மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில், நீதிபதி எழிலரசி முன்னிலையில் நடைபெற்று வந்தது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், அற்புதராஜுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 15,000 ரூபாய் அபராதமும், அருணுக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 16,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி எழிலரசி, நேற்று தீர்ப்பளித்தார்.

