/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
உதயம்பாக்கம் - படாளம் உயர்மட்ட பாலம் திருத்திய மதிப்பீடு ரூ.410 கோடிக்கு உயர்வு
/
உதயம்பாக்கம் - படாளம் உயர்மட்ட பாலம் திருத்திய மதிப்பீடு ரூ.410 கோடிக்கு உயர்வு
உதயம்பாக்கம் - படாளம் உயர்மட்ட பாலம் திருத்திய மதிப்பீடு ரூ.410 கோடிக்கு உயர்வு
உதயம்பாக்கம் - படாளம் உயர்மட்ட பாலம் திருத்திய மதிப்பீடு ரூ.410 கோடிக்கு உயர்வு
ADDED : டிச 17, 2024 11:35 PM

மாமல்லபுரம்:நீர்வளத்துறை சார்பில், உதயம்பாக்கம் - படாளம் பாலாற்றில் கதவணையுடன் கூடிய உயர்மட்ட பாலம் அமைக்கவுள்ள திட்டத்திற்கு, மதிப்பீடு திருத்தப்பட்டு, 410 கோடி ரூபாய்க்கு உயர்த்தப்பட்டு உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் தோன்றும் பாலாறு, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் வழியே கடந்து, கல்பாக்கம் அடுத்த வாயலுார் - கடலுார் பகுதியில், வங்க கடலில் கலக்கிறது.
திருக்கழுக்குன்றம் தாலுகாவின் பொன்விளைந்தகளத்துார், உதயம்பாக்கம், ஆனுார் உள்ளிட்ட கிராமங்கள், ஆற்றின் ஒருபுறம் உள்ளன. ஆற்றின் மறுபுறம் மதுராந்தகம் தாலுகாவின் படாளம், பூதுார், புலிப்பரக்கோவில் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
இப்பகுதியினர், பிற இடங்களுக்குச் செல்ல, உதயம்பாக்கம் - படாளம் பாலாற்றுப் படுகையை கடந்தே செல்ல வேண்டும்.
இது ஒருபுறமிருக்க, ஆற்றின் தென்கரையில் உள்ள படாளம் பகுதியில், மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையும் இயங்குகிறது. திருக்கழுக்குன்றம் சுற்றுப்புற பகுதிகளில் விளைவிக்கப்படும் கரும்பை, ஆலை அரைவைக்காக, ஆற்றை கடந்தே கொண்டு செல்ல வேண்டும்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், ஆற்றில் பாலம் இல்லை. விவசாயிகள், செங்கல்பட்டு வழியே, நீண்ட துாரம் சுற்றிக்கொண்டு, படாளம் சர்க்கரை ஆலைக்கு கரும்பை கொண்டு சென்றனர்.
உதயம்பாக்கம் பகுதியினர், 1 கி.மீ., அகல ஆற்றை கடந்தால், படாளம் செல்லலாம். ஆனால், பாலமின்றி, 20 கி.மீ., சுற்றிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஆற்றை கடந்து, மதுராந்தகம் பகுதிக்கு எளிதாக செல்ல வேண்டிய பொன்விளைந்தகளத்துார் பகுதியினர், அவ்வாறு செல்ல முடியாமல், செங்கல்பட்டை சுற்றிச் சென்றனர்.
இதனால் பணம், கால விரயங்கள், எரிபொருள் விரயமாவதை தவிர்க்க, ஆற்றுப்படுகையில் பாலம் கட்ட, பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தினர்.
இதையடுத்து, கரும்பு போக்குவரத்து முக்கியத்துவம் கருதி வேளாண்மை துறை சார்பில், கடந்த 1992ல் பாலாற்றில் தரைப்பாலம் கட்டப்பட்டது.
இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், மகிழ்ச்சி தொடர்ந்து நீடிக்கவில்லை. அரசியல் பிரமுகர் ஒருவர், இந்த தரைப்பாலத்தை உறுதியாக கட்டவில்லை என, சர்ச்சை எழுந்தது.
பாலமும், கட்டப்பட்ட சில மாதங்களில், வெள்ளப்பெருக்கில் இடிந்து தகர்ந்தது. அப்பகுதியினர், மீண்டும் நீண்ட துாரம் சுற்றிக்கொண்டு செல்ல நேரிட்டது.
இதைத்தொடர்ந்து, புதிதாக பாலம் அமைக்குமாறு, அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பாலம் அமைக்க நிதி அளிக்க கோரி அரசிடம், சர்க்கரை ஆலையை நிர்வகிக்கும் கூட்டுறவுத்துறை வலியுறுத்தியது. ஆனால், இந்த கோரிக்கை கிடப்பில் போடப்பட்டது.
குடிநீர், விவசாயத்தின் நீராதாரமாக விளங்கும் பாலாற்றில், ஆற்று மணல் கடத்தலால் பள்ளங்கள் ஏற்பட்டு, நிலத்தடிநீர் மட்டமும் குறைகிறது. இதை தடுக்கவும், நீராதாரத்தை காக்கவும் கருதி, இங்கு தடுப்பணை அமைக்க வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து பொதுப்பணித்துறை, முழுமையான கதவணையுடன் கூடிய தடுப்பணையை, 270 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்க முடிவெடுத்து, அரசிற்கு கருத்துரு பரிந்துரைத்தது.
இதை பரிசீலித்த அரசு, உயர்மட்ட பாலமும் அமைக்க முடிவெடுத்து, கதவணையுடன் கூடிய உயர்மட்ட பாலத்திற்கு மதிப்பீடு தயாரிக்க அறிவுறுத்தியது.
இதையடுத்து பொதுப்பணித் துறை, 3,445 அடி நீளம், 5 அடி உயரம் அளவில், முழு நீள கதவணையுடன் தடுப்பணை, அதன் மேல் 25 அடி அகலத்தில் பாலம் அமைக்க முடிவு செய்தது.
இத்திட்ட திருத்திய மதிப்பீடை, 390 கோடி ரூபாய்க்கு உயர்த்தி பரிந்துரைத்தது.
இந்நிலையில், திருப்போரூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாலாஜி, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ், எம்.எல்.ஏ., விருப்ப முன்னுரிமை பணியாக, அரசிடம் இதை வலியுறுத்தினார்.
நீர்வளத்துறை சார்பில், 410 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டம், சிறப்பு திட்ட செயலாக்க துறையின் பரிசீலனையில் உள்ளதாக, அரசு தெரிவித்து உள்ளது.