குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் அடிப்படை வசதியின்றி பணியாளர்கள் அவதி
குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் அடிப்படை வசதியின்றி பணியாளர்கள் அவதி
UPDATED : அக் 07, 2026 04:52 PM
ADDED : அக் 07, 2026 04:44 PM

திருப்போரூர்: திருப்போரூர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில், போதிய அடிப்படை வசதிகளின்றி பணியாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
திருப்போரூர் பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில், கடந்த 1986ம் ஆண்டு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகம் அமைக்கப்பட்டது. இந்த கட்டடம் சேதமடைந்ததால், பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் உள்ள பழைய வேளாண் கட்டடத்துக்கு மாற்றப்பட்டது.
இந்த அலுவலகத்தின் கீழ், திருப்போரூர் ஒன்றியத்தில், 163 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், திட்ட அலுவலர், கண்காணிப்பாளர், மேற்பார்வையாளர், அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் என 200க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இதில், 98 சதவீதம் பெண் பணியாளர்களே அதிகம் உள்ளனர்.
அங்கன் வாடி மூலம் ஆறு வயது வரை உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து, கல்வி, கர்ப்பிணியர், பாலுாட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து, சுகாதாரம் உள்ளிட்ட பணிகள் இங்கு மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், ஊழியர்களின் மாதாந்திர ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.
இங்கு போதிய இடவசதி இல்லாததால், அங்கன்வாடி பணியாளர்களுக்கான மாதாந்திர கூட்டம் நடத்துவதில் சிரமம் ஏற்படுகிறது.
இதுகுறித்து பணியாளர்கள் கூறியதாவது:
மாதந்தோறும் ஊட்டச்சத்து சேகரிப்பு மற்றும் கணக்கெடுப்பு பணி நடத்துவது வழக்கம். ஆனால், இடவசதியின்றி பணியாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும், கழிப்பறை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளும் இல்லை. அலுவலகத்தின் பின்புறத்தில் குப்பை கழிவுகளுடன் துர்நாற்றம் வீசுகிறது.
எனவே, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகத்திற்கு, அடிப்படை வசதிகளுடன் புதிய கட்டடம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
