/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தைலாவரம் குளத்தில் கட்டுமான பணி ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்
/
தைலாவரம் குளத்தில் கட்டுமான பணி ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்
தைலாவரம் குளத்தில் கட்டுமான பணி ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்
தைலாவரம் குளத்தில் கட்டுமான பணி ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்
ADDED : பிப் 06, 2025 12:20 AM

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி அடுத்துள்ள தைலாவரம் பகுதியில், அரசுக்குச் சொந்தமான குளம் உள்ளது. இந்த குளம், செங்கல்பட்டில் இருந்து, தாம்பரம் நோக்கிச் செல்லும் ஜி.எஸ்.டி., சாலையின் அருகில் உள்ளது.
இதில் கோடை காலத்திலும் தண்ணீர் இருக்கும். இந்த குளத்திற்கு நீர் வரத்தானது, மழைநீர் வடிகால்வாய் வாயிலாக வருகிறது.
சுற்று வட்டார பகுதி மக்களுக்கு, நிலத்தடி நீராதாரமாகவும் இக்குளம் உள்ளது.
இந்த குளம், 72 சென்ட் நிலப்பரப்பில் இருந்தது. தற்போது குளத்தின் பின்புறம், வலதுபுறம், இடதுபுறம் உள்ள இடங்களின் உரிமையாளர்கள், குளக்கரையில் கட்டட கழிவுகளை கொட்டி, ஆக்கிரமித்து வருகின்றனர்.
மேலும் தற்போது, ஆக்கிரமித்துள்ள இடத்தில் கட்டடம் கட்டும் பணிகள் துவங்கியுள்ளன.
இந்த குளத்தின் வடக்கு பகுதியில் அதிகமான இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, அதில் கட்டடங்கள் கட்டி வணிக நிறுவனங்களுக்கு கூடுதல் வாடகைக்கு விடப்பட்டுள்ளன.
மேலும், குளத்தின் பின்புற பகுதியை ஆக்கிரமித்து, அதில் வாகன நிறுத்தம் அமைத்து கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, மாவட்ட கலெக்டர், வட்டார வளர்ச்சி அலுவலர், தாசில்தார் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு, பகுதிவாசிகள் புகார் தெரிவித்து உள்ளனர்.
ஆனால், நடவடிக்கை இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால், இந்த குளம் முழுதும் ஆக்கிரமிக்கப்பட வாய்ப்புள்ளது.
எனவே, குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, இடத்தை மீட்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

