/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அரசு உயர்நிலைப்பள்ளியை தரம் உயர்த்த வலியுறுத்தல்
/
அரசு உயர்நிலைப்பள்ளியை தரம் உயர்த்த வலியுறுத்தல்
ADDED : ஆக 10, 2025 12:57 AM
சித்தாமூர்:ஆண்டார்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளியை, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சித்தாமூர் அடுத்த வன்னியநல்லுார் ஊராட்சிக்குட்பட்ட ஆண்டார்குப்பம் கிராமத்தில், அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளி 1963ம் ஆண்டு துவங்கப்பட்டது. இங்கு, 6 முதல் 10ம் வகுப்பு வரை, 380க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர் படிக்கின்றனர்.
அரசூர், வன்னியநல்லுார், மாம்பட்டு, ஈசூர், வெண்ணந்தல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மாணவ - மாணவியர் இப்பள்ளியால் பயன்பெறுகின்றனர்.
இங்கு தலைமை ஆசிரியர் உட்பட 12 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
ஆண்டார்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் அதிகம் வசிக்கின்றனர். ஆண்டார்குப்பம் உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு வரை மட்டுமே உள்ளதால், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மேல்நிலை கல்வி படிக்க, மாணவ- மாணவியர், கயப்பாக்கம், சூணாம்பேடு, மதுராந்தகம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் நிலை உள்ளது.
பேருந்தில் நீண்ட துாரம் செல்ல வேண்டிய நிலை உள்ளதால், சில மாணவியர் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
இப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக் கோரி, கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன், இப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதற்காக, மக்கள் நிதியாக இரண்டு லட்சம் ரூபாய் அரசுக்கு வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாவட்ட நிர்வாகம் ஆண்டார்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.