/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டிலிருந்து சென்னைக்கு நேரடி பேருந்துகள் இயக்க வலியுறுத்தல்
/
செங்கல்பட்டிலிருந்து சென்னைக்கு நேரடி பேருந்துகள் இயக்க வலியுறுத்தல்
செங்கல்பட்டிலிருந்து சென்னைக்கு நேரடி பேருந்துகள் இயக்க வலியுறுத்தல்
செங்கல்பட்டிலிருந்து சென்னைக்கு நேரடி பேருந்துகள் இயக்க வலியுறுத்தல்
ADDED : ஏப் 16, 2025 07:45 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டில் இருந்து தி.நகர், வேளச்சேரி, மந்தைவெளி, கோயம்பேடு உட்பட சென்னை மாநகரின் பல இடங்களுக்கு நேரடியாக இயக்கப்பட்ட பேருந்துகள் கொரானா காலத்தில் நிறுத்தப்பட்டன.
அந்தப் பேருந்துகளை மீண்டும் இயக்கிட வேண்டும் என, செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:
செங்கல்பட்டு மற்றும் சுற்றுப் பகுதியில் வசிப்போர், சென்னை மாநகரின் தி.நகர், பிராட்வே, வேளச்சேரி, மந்தைவெளி, கோயம்பேடு ஆகிய பகுதிகளுக்கு நேரடியாக பயணிக்கும் வகையில், 2019ம் ஆண்டு வரை, பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.
அதன்படி, செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் இருந்து, தி.நகர் செல்ல '500 டி' வேளச்சேரி செல்ல '500 ஜெ', பிராட்வே செல்ல '500 பி', மந்தைவெளி செல்ல '577', கோயம்பேடு செல்ல '500 சி' ஆகிய தடம் எண்களில் பேருந்துகள் இயக்கப்பட்டன.
தவிர, தி.நகர் முதல் மறைமலை நகர் வரை தடம் எண் 518ன் கீழ் பேருந்துகள் இயக்கப்பட்டன. பின், கொரானா காலத்தில் இந்த பேருந்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.
கொரானா தொற்று முடிவுக்கு வந்த பின், இந்த பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கும் என, பொதுமக்கள் நம்பிக்கையோடு இருந்தனர். ஆனால், இதுவரை, நேரடி பேருந்துகள் இயக்கப்படவில்லை.
நேரடி பேருந்துகள் இல்லாததால், மருத்துவ சிகிச்சை, கல்லுாரி, வேலை, தொழில் நிமித்தமாக தி.நகர், கோயம்பேடு, பிராட்வே, வேளச்சேரி, மந்தைவெளி உள்ளிட்ட பல இடங்களுக்கு செல்ல, இரண்டு அல்லது மூன்று பேருந்துகள் மாறி, பயணிக்க வேண்டி உள்ளது.
இதனால், கால விரயம், கூடுதல் பயணக் கட்டணம், அலைச்சலுக்கு ஆளாகி, மன உளைச்சலும் ஏற்படுகிறது.
நிறுத்தப்பட்ட பேருந்து சேவைகள் மீண்டும் இயக்ககோரி, போக்குவரத்து துறை அதிகாரிகள், முதலமைச்சர் தனிப் பிரிவுக்கு பலமுறை விண்ணப்பித்தும் நடவடிக்கை இல்லை.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.